Wednesday, 27 May 2015

பன்னீர் போண்டாவும் மசாலாவும்


                         பன்னீர் போண்டாவும்  மசாலாவும்
                       ------------------------------------------------------
பூவையின் எண்ணங்கள் தளமே என் கவனத்தில் இல்லாமல் சவலைக் குழந்தை மாதிரி இருந்தது. பலரும் அவர்களது மெயின் தளங்களிலேயே சமையல் குறிப்புகள் தருகிறார்கள்சமையலுக்கென்று தனித் தளம் வைத்துக் கொண்டிருக்கும் நான் அப்படி செய்ய விரும்பவில்லை. திடீர் ஞானோதயம் வந்து பதிவிடுகிறேன் முதலில் பன்னீர் போண்டா செய் முறையைக் கூறுகிறேன் செய்வதற்கு எளிமையானது இது
கொஞ்சம் கடலை மாவு ( வழக்கம் போல் அளவுகள் கொடுக்கவில்லை.) செய்யும் குவாண்டிடியைப் பொறுத்து) எடுத்துக் கொள்ளுங்கள் சிறிது அரிசி மாவு, சிறிது கார்ன் மாவு  மிளகாய்த் தூள் உப்பு சீரகப் பொடி, பெருங்காயத்தூள் இவற்றைக் கலந்து சிறிது நீர் ஊற்றிகொஞ்சம் கெட்டியாகவே பஜ்ஜிக்கு செய்யும் பதத்தில் தயார் செய்யவும்
பன்னீரை முக்கால் அங்குல க்யூப்களாக வெட்டி எடுத்துக் கொண்டு அதை இந்த பிசைந்த கலவையில் போட்டு சிறிது நேரம் ஊற விடவும் ஒரு கடாயில் தேவையான எண்ணை ஊற்றி இந்த மாவில் ஊறிய பன்னீரைப் பொரித்து எடுக்கவும் பன்னீர் போண்டா ரெடி
ஒரு கடாயில் சிறிது எண்ணை ஊற்றி தாளிதப் பொருட்களுடன் நன்கு பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிது இஞ்சிப் பூண்டு விழுது சிறிது கரம் மசாலா உப்பு போட்டுக் கிளரவும் நன்றாகக் கிளரிய விழுதில் பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்க்கவும் மிகவும் நீராக இல்லாமலும் மிகவும் கெட்டியாக இல்லாமலும் இருக்கும் மாதிரி நீர் விட்டுக் கொதிக்க வைக்கவும்  இந்தக் கலவையில் பன்னீர் போண்டாவைப் போட்டுக் கலக்கவும்
பன்னீர் போண்டாவாகவோ க்ரேவி கலந்தோ அவரவர் விருப்பபடி உண்டு மகிழலாம்








Saturday, 30 August 2014

இதற்கு என்ன பெயர் வைக்கலாம்..?


                        இதற்கு என்ன பெயர் வைக்கலாம்...?
                        --------------------------------------------------
பூவையின் எண்ணங்களில் பதிவிட்டுச் சில காலம் ஆகிறது. அதையும் அவ்வப்போது கவனிக்க வேண்டும் அல்லவா.ஒரு வித்தியாசமான ரெசிபி என்று எழுதினால் அது எல்லோருகும் தெரிந்ததாயிருக்கிறது. இருந்தாலும் இது சாதாரணமாக இடப்படும் ரெசிபி போல் இருக்காது என்ற நம்பிக்கையில்,



வீடுகளில் பொதுவாக சமைக்கும்போது ஒரு சாம்பார். ஒரு ரசம் ஒரு பொறியல் என்று காய்கறிகளின் மாற்றத்தோடு வரும் ஒரு மாற்றத்துக்காக இதை சமைத்துப் பார்க்கலாமே.இதற்குப் பெயர் நீங்களே சூட்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நான் பதிவிட்ட்பின் பலரது வீடுகளிலும் சிறிய மாற்றங்களுடன் இது சமைக்கப் பட்டிருக்கும்

தேவையான பொருட்கள்

தக்காளி ,வெங்காயம் இஞ்சிப்பூண்டு விழுது, பட்டை, லவங்கம்.ஏலக்காய், அளவுகள் நான் கூறப்போவதில்லை. அவரவர் ருசிக்கேற்ப உபயோகிக்க வேண்டியது. மஞ்சப்பொடி. மிளகாய்ப் பொடி, தாளிக்கவும் வதக்கவும் எண்ணை, உப்பு, அரிசி.
 .
செய்முறை

முதலில் அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும் (மீடியம் சைசில்). தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும் குக்கரில் எண்ணை விட்டு தாளிக்கும் போது பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்க்கவும் அதில் வெங்காயத்தை வதக்கவும் வதக்கிய வெங்காயத்தில் சிறிது இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அதன் பின் அரைத்து வைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கவும் இப்படி  வதக்கியபின் அதில் கழுவி வைத்த அரிசியைச் சேர்த்துக் கிளறவும் (ஏறத்தாழ வறுபடும் அளவுக்கு ) நன்றாக மிக்ஸ் ஆனவுடன் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் என்று நீர் ஊற்றி  தேவையான அளவு உப்பு மஞ்சப்பொடி மிளகாய்ப் பொடி சேர்த்துக் குக்கரை மூடி இரண்டோ மூன்றோ விசில் வரும் வரை வேக விடவும்.
வெந்தபின் எடுத்துப் பார்த்தால் ரெடி டு ஈட் சாதம் ரெடி.
வெங்காயத்தை வதக்கும்போது விரும்பினால் காரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் சேர்க்கலாம். விரும்பினால் சிறிது புதினாவையும் அரைத்த்ச் சேர்க்கலாம் இதற்கு உடன் சாப்பிட( தொட்டுக்க) தயிரில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வைக்கலாம் செய்து பார்த்துச் சொல்லுங்கள். என்ன பெயரில் அழைக்கலாம் என்றும் தெரியப் படுத்தவும்              

Tuesday, 20 May 2014

பிசி பேளா ஹுளி அன்ன


                                      பிசி பேளா ஹுளி அன்ன
                                    =========================  


இது என்னவோ என்று பயபடவேண்டாம். கர்நாடகாவில் பிரசித்தமான உணவு வகை முதலில் இதன் பொருள் என்னவென்று காண்போம் பிசி என்றால் சூடான , பேளா என்றால் பருப்பு, ஹுளி என்றால் புளி அன்னா என்றால் சாதம் . அதாவது சூடான பருப்பு புளி சாதம் செய்து முடித்தபின் பிசைந்து வைத்த தளராக இருக்கும் சாம்பார் சாதம் போல் இருக்கும்  தனியாக சாதம் சாம்பார் வைத்து கலந்து சாப்பிடுவதற்குப் பதில் ஒரு ரெடி மேட் சாம்பார் சாதம்

 இது இருவிதமான செய்முறைகளில் செய்யலாம் முதலில் அரிசி துவரம் பருப்பு ஒன்றுக்குப் பாதி என்னும் அளவில் குக்கரில் வேகவைக்கப் படுகிறது ஒன்றுக்கு மூன்று என்று நீரின் அளவை நிர்ணயிக்கலாம் தளரான சாதம் தயார்.
ஒரு கடாயில்எண்ணை ஊற்றித் தாளித்து தேவைப்பட்ட காய்கறிகளை நறுக்கியதை வதக்கி எடுக்கவும் ( பிரியப் பட்ட காய்கறிகளை உபயோகிக்கலாம்) பொதுவாக சின்ன வெங்காயம் தக்காளி  காரட் முருங்கைக்காய் எடுத்துக் கொள்ளலாம் வதக்கி  வைத்த காயில் அவரவர் ருசிக்கேற்ப புளிக் கரைசலை ஊற்றி உப்பு மஞ்சப் பொடி போட்டு கடாயில் காய்களை வேகவிடவும் இந்தப் புளிக் குழம்பை வேக வைத்த சாதத்தில் ஊற்றி நன்கு கிளறவும் இதில் நான் நீரின் அளவோ புளியின் அளவோ தரவில்லை. சிலருக்கு  கெட்டியாக இருந்தால் பிடிக்கும். சிலருக்குத் தளராக இருந்தால் பிடிக்கும் ஆனால் பொதுவாக பிசிபேளா ஹுளி அன்னா சற்றுத் தளராகவே இருக்க வேண்டும். சாதம் புளிக் கரைசலில் பிசி பேளா பொடி போட்டு இறக்கி வைக்கலாம்.
ஆனால் புளிக்கரைசலிலேயே மல்லி மிளகாய் வெந்தயம் உ. பருப்பு வதக்கிப்மிக்சியில் சிறிது தேங்காய் சேர்த்து அரைத்துக் கொண்டு  கலக்கி அதை வேகவைத்த சாதத்தில் கலக்கவும் செய்யலாம் பிசி பேளா பொடிக்கு பதில் இவ்வாறு செய்யலாம்  இறக்கி வைத்த அன்னத்தில் சிறிது நெய் ஊற்றி கருவேப்பிலையும் தூவலாம்

இரண்டாவது செய்முறையில் குக்கருக்குப்பதில் ஒருபெரிய பாத்திரத்தில் அரிசி பருப்பு வதக்கிய காய்கறிகளுடன் புளிக் கரைசலையும் ஊற்றி உப்பு மஞ்சள் பொடி போட்டு  ஒன்றாக வேகவைக்கலாம் நன்றாக வெந்து வரும் சமயம் சாம்பார்பொடியுடன் அரைத்து வைத்த தேங்காயையும் சேர்க்கலாம்
இறக்கி வைத்து நெய்யில் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கலாம்          

Saturday, 26 April 2014

கோபி மஞ்சூரியன்


                                                     கோபி மஞ்சூரியன்
                                                      -------------------------


பெயரிலிருந்தே தெரிகிறது இது ஒரு இந்திய சீனச் சமாச்சாரம் என்று. கோபி என்பது நாம் தமிழில்(?) காலிஃப்லவர் என்று அழைக்கும் பூ. மஞ்சூரியா சீன தேசத்தின் ஒரு பகுதி. அண்மையில் நாங்கள் கேரளா ஒத்தப்பாலத்தில் மஹாராஜாவின் கொட்டாரம் என்று அழைக்கப் பட்ட விடுதியில் தங்கினோம். இரவு உணவுக்கு முன் ஸ்டார்டராக இந்த கோபி மஞ்சூரியன் ஆர்டர் செய்தார்கள். விலை மஹா ராஜாக்கள் கொடுக்கக் கூடியதே. ஒரு ப்லேட் ரூ.200-/ என்று நினைக்கிறேன் அதை உண்ணும்போது என் மனைவி செய்யும் கோபி மஞ்சூரியன் நினைவுக்கு வந்தது. பெங்களூர் திரும்பியதும் அவளிடம் அதை சமைக்கச் சொல்லி கேட்டு உண்டேன். அதன் செய்முறையைத்தான் பூவையின் எண்ணங்களில் பகிர்ந்து கொள்கிறேன் (பின் பதிவில் பதார்த்தத்தையா பகிர முடியும்?)

 நல்ல காலிஃப்ளவர் வாங்கிக் கொள்ளுங்கள். மஞ்சள் நிறத்தில் இருக்கக் கூடாது என்கிறாள் என் மனைவி. பூவை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும் நல்ல நீரைக் கொதிக்க வைக்கவும் ( சிறிது உப்பு கலந்து) அதில் நறுக்கிய பூத்துண்டுகளைப் போட்டு மூடி வைக்கவும் அடுப்பை அணைத்து விட்டு அப்படியே அதை சுமார் இருபது நிமிடங்கள் வரை வைக்கவும்.  அது கொதிநீரில் வேகும் போது .............
 ஒரு பாத்திரத்தில் சிறிது மைதாமாவையும் சிறிது கார்ன் ஃப்ளௌரையும் சிறிது சோயா சாசையும் சிறிது இஞ்சிப் பூண்டு விழுதையும் தேவைக்கேற்ப . ஒரு சிட்டிகை மிளகாய்ப் பொடியையும் தேவையான அளவு உப்புடன் கலந்து பஜ்ஜிக்கு இடும் மாவு பதம் வருமாறு நீர் ஊற்றி கலக்கவும் கடாயில் எண்ணை ஊற்றி அது நன்கு சூடானதும், வேகவைத்த காலிஃப்ளவர்களை நன்கு நீர் வற்றப் பிழிந்து எடுத்து பஜ்ஜிமாவில் கலக்கவும் பின் அவற்றை எண்ணையில் பொரித்து எடுக்கவும்
க்ரேவி செய்ய
--------------
வெங்காயம் பச்சைமிளகாய் ( காரத்துக்கு தக்கபடி)நறுக்கியது  சிறிது,இஞ்சிப் பூண்டு விழுது இவற்றை எண்ணையில் நன்கு வதக்கவும்  சிறிது கார்ன் மாவை நீரில் கலக்கி ( சீராக கட்டி யில்லாமல்) வதக்கிய கலவையில்  கடாயில் தேவையான உப்பு இட்டு ஊற்றவும் ., க்ரேவியின் பதம் தேவைப்பட்ட அளவு வரும் வரை கிளரவும், சரியானபதம் வரும்போது பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டுக்கிளரவும் சிறிது அள்வு சோயாசாஸும் சேர்க்கவும்  காலிஃப்ளவர் துண்டுகள் க்ர்ரெவியில் நன்றாக கலந்தபின் கலவையில் டொமாடோ சாஸ் கலக்கவும்
கோபி மஞ்சூரியன் dry யாக இருக்கவேண்டுமானால் க்ரேவியில் நீரின் அளவைக் குறைக்கவும் . க்ரேவியுடன் வேண்டுமென்றால் க்ரேவி கூழான பதம் வருமாறு தயாரிக்கவும்
நன்கு பொடியாக அறுத்த கொத்துமல்லி தழையைச் சேர்க்கவும்
சிலருக்கு காரசாரமாக மஞ்சூரியன் இருக்க வேண்டுமானால் நறுக்கிய பச்சை மிளகாயின் அளவைக்கூட்டலாம் சிலருக்கு இஞ்சிப் பூண்டு வாசனையும் சுவையும் குறைவாக இருக்கப் பிடிக்கும். அதற்கேற்ப அவற்றின் அளவை சேர்க்கலாம் விரும்பிய சுவையில் கோபி மஞ்சூரியன் தயார்.     

       
   

    

Thursday, 24 April 2014

ஒரு புதுமையான மாங்கோ ஜூஸ்


                                             ஒரு புதுமையான மாங்கோ ஜூஸ்
                                            ----------------------------------------------------



பூவையின் எண்ணங்கள் வலைத்தளம் என்னை ஏன் வருகைதந்து பதிவெழுதுவதில்லை என்று கேட்கிறாற்போலிருந்தது, அதுவும் என் வலைத்தளம்தானே. கவனிக்காவிட்டால் சவலையாகிவிடும். இருந்தாலும் எழுதுவது சற்று வித்தியாசமான உணவுப் பொருள் பற்றி இருக்க வேண்டாமா. கோடைக் காலம் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. மாம்பழ சீசன் தொடங்குகிறது மாங்கோ ஜூஸ் குடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால் நான் சாதாரண மாங்கோ ஜூஸ் பற்றி எழுதப் போவதில்லை. சீசன் சூடு பிடிக்கும் முன் மாங்காய்கள் மார்க்கெட்டில் வந்திருக்கும் . கோடைக்குக் குளுமையாக ஒரு ஜூசின் ரெசிப்பி தருகிறேன் செய்து பாருங்கள்.
நல்ல முற்றிய மாங்காயை குக்கரில் ஓரிரு நிமிஷங்கள் வேக வைக்கவும் குக்கர் இல்லாவிட்டால் கொதிக்கும் நீரில் சிறிது நேரம் வேக வைக்கலாம் வெந்த மாங்காயின் தோலை எடுத்து மாங்காய்ப் பல்ப்பை மட்டும் எடுத்து மிக்சியில் அடித்து கூழ் போலாக்கிக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீரில் கரையும் வரை கொதிக்க வைக்கவும் அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் மாங்காய்ப் பல்ப்பை அதில் நன்றாகக் கலக்கவும் கொஞ்சம் சுக்குப் பொடி. ஏலக்காய்ப் பொடி சிறிது வறுத்து அரைத்த சீரகப் பொடி போட்டு கலக்கவும் . கலக்கிய ஜீசை பாட்டிலில்  நிரப்பி ஃப்ரிட்ஜில் வைக்கவும் தேவைப்பட்ட போது நீரில் கலக்கிக் குடிக்கவும்
 இதில் நான் அளவு ஏதும் தரவில்லை. நாக்கின் ருசியைக் கண்பார்த்துக் கை செய்யவேண்டும்
ஆரோக்கியமான குளிர்பானம் /

Wednesday, 25 December 2013

அவனின்றி கேக் பேக்கலாம்


                            அவனின்றி கேக் “பேக்”கலாம்
                            ------------------------------------------


சென்ற பதிவில் கேக் செய்யும் முறை பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். கேக் செய்முறை விளக்கங்கள் ஏராளமாக வந்திருக்கும். கிருஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டின் போது செய்து மகிழ இவனது கேக் செய்முறை. இதில் என்ன வித்தியாசம் என்றால் மிகச் சாதாரண உபகரணங்களுடன் அவனின்றி(oven) கேக் செய்யலாம்.

கேக் செய்யத் தேவையான பொருட்கள்.
   
மைதா மாவு, சர்க்கரை, முட்டை வெண்ணை, சிறிது பாலேடு, வெனிலா எசென்ஸ், முந்திரிப்பருப்பு பேக்கிங் சோடா
இவற்றின் அளவுகள் வெண்ணை, சர்க்கரை மைதா இம்மூன்றும் ஒரே எடையில் இருக்கவேண்டும். உ-ம் கால் கேஜிமைதா என்றால் கல் கேஜி வெண்ணையும் கால் கேஜி சர்க்கரையும் தேவைப் படும். வீட்டில் எடை போட்டுப் பார்ப்பது கடினம் என்பதால் ஒரு டம்ப்ளர் மாவுக்கு அதற்கும் சற்றுக் குறைவாகச் சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம். நான் டம்ப்ளர் என்று சொல்லும் போது அது 250 ml ( கால் லிட்டர் அளவு கொண்டது, வெண்ணை கால் கேஜிக்கும் சற்று குறைவாக இருக்கும். . இந்த அளவுக்கு இரண்டு முட்டைகள் தேவை படும்.

முதலில் முட்டையை உடைத்து வெள்ளை மஞ்ச்ள் தனித்தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளையை நன்றாகச் சிலும்பவும் நன்றாகச் சிலும்பிய முட்டையின் வெள்ளை பொங்கி எழுந்து ஒரே நுரைபோல் காண வேண்டும். சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும் பொடித்த சர்க்கரையை வெண்ணையில் நன்றாக மிக்ஸ் செய்யவும் மைதாமாவில் சிறிது ( முக்கால் டீஸ்பூன்.?) பேக்கிங் சோடாவை நன்றாகக் கலக்கவும் பேக்கிங் சோடா தூள் பரவலாக நன்றாகவே கலந்திருக்க வேண்டும்.

வெண்ணை சர்க்கரை மிக்சில் கொஞ்சம் கொஞ்சமாக மைதாமாவைப் போட்டு கிளறவும். இந்த கிளறல்தான் சற்றுக் கடினமான வேலை. இந்தக் கலவை இறுக்கம் அதிகம் போல் தோன்றினால் அதில் சிறிது பாலேடு கலக்கலாம். நன்றாகக் கிளறியபின் அதில் அடித்து வைத்த முட்டையின் வெள்ளையைக் கலக்கவும் அதன் பிறகு முட்டையின் மஞ்சளைச் சேர்த்துக் கலக்கவும் இந்தக் கலவை ஒரு homogeneous  mix  ஆக இருக்க வேண்டும் அதில் பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கடைசியில் ஒரு டீஸ்பூன் வெனிலா எஸ்ஸென்ஸையும் கலக்கினால் கேக் செய்ய “ பாட்டர் “ரெடி.

பொதுவாக கேக் செய்ய oven  வேண்டுமென்பார்கள். அது இல்லாமலேயே கூட கேக் செய்யலாம். குக்கரில் வரும் சாதம் வைக்க வரும் பாத்திரத்தின் உட்புறம் சிறிது வெண்ணை எடுத்து தடவவும் அப்படித்தடவிய பாத்திரத்தில் மைதா பொடி தூவி அது தடவிய வெண்ணையில் ஒட்டிக் கொள்ளுப்படியாக இருக்கும். அதாவது பாத்திரத்தின் உட்புறம் மாவு பூசிக் கொண்ட மாதிரி இருக்க வேண்டும். இந்தப் பாத்திரத்தில் கேக் பாட்டரை போட்டு ( ஒரு இன்ச் உயரத்துக்கு ) சமமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் முக்கியமாக பாட்டரில் காற்றுத் துளைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
இப்போது கேக் பேக் செய்யத்தயார். குக்குரின் (நான் பான் (pan) உபயோகித்தேன்) உள்ளே இந்தப் பாத்திரம் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது பாத்திரம் குக்கரின் எந்த பகுதியிலும் தொடாதபடி  அடியில் குடம் வைக்கும் base கம்பி வைத்து அதன்மேல் வைக்க வேண்டும் முக்கியமாக மிதமான தணலில்தான் கேக் பேக்காக வேண்டும். குக்கரின் gasket-ஐ எடுத்து விட்டு குக்கரை மூடவும்.வெயிட் வைக்கக் கூடாது இரண்டு நிமிட சூட்டுக்குப் பின் ஸ்டவ்வை சிறிதாக்கி அந்த சூட்டில் கேக் வேகட்டும். பதினைந்து இருபது நிமிடங்களில் கேக்கின் வாசனை வரும். குக்கரின் மூடியை எடுத்து கேக் பேக்காகி இருக்கிறதா என்று சோதிக்கவும் கேக் பாட்டரில் ஒரு கத்தியைச் சொறுகினால் ஒட்டக் கூடாது. ஒட்டினால் இன்னும் சிறிது நேரம் கழிந்து சோதனை செய்யலாம். நன்றாக பேக் ஆனபின் எடுத்து  ஒரு வட்டத்தட்டில் கவிழ்க்கவும் . நன்றாக பேக் ஆன கேக் பொன்னிறமாக இருக்கும்

கைவேலை தெரிந்தவர்கள் அதன் மேல் ஐசிங் செய்து அலங்கரிக்கலாம்.  கேக் அவனே இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே கேக் தயாரிக்கும் முறை பற்றிக் கூறி இருக்கிறேன். எங்கள் வீட்டில் நான் செய்யும் இம்மாதிரி கேக் எல்லோராலும் விரும்பி உண்ணப் படும்

கிருஸ்துவின் பிறந்த நாளில் பொதுவாக கேக் செய்யப் படுகிறது. அதுவே எல்லோர் பிறந்த நாளிலும் கேக் செய்யும் பழக்கமாகிவிட்டதோ. அண்மையில் நண்பர் வைகோவின் பதிவில் பெரியவரின் சிந்தனையாக படித்தது நினைவில் வருகிறது. ஜேஷுவா என்னும் பெயர் மருவி ஏசு என்று உச்சரிக்கப் பட்டு வருகிறது. இந்த ஏசுவே ஈசன் ஆகவும் மருவலாம். கிருஸ்து என்னும் பெயர் மருவி கிருஷ்டினன்  ஆகவும் நினைக்கலாம் ஆக ஏசு கிருஸ்து ஈச கிருட்டினன் ஆகவும் கொள்ளலாம் என்று படித்த நினைவு. ஆக இந்த கேக்செய்முறை எல்லா தெய்வங்களுக்கும் சமர்ப்பிக்கப் படுகிறது.

முட்டையின் வெள்ளையை சிலும்ப  
முட்டை வெள்ளை சிலும்பியது  
குக்கர் பான்
                         
குக்கர் பாத்திரம்  

 
குக்கர் பான் பாத்திர சப்போர்ட்டுடன்

 
கேக் பாட்டர் பாத்திடத்தில்

கேக் பாட்டர் போடுமுன் பாத்திரம்
கேக் பாட்டர் ஸ்டவ்வில் மூடும் முன்
cake pieces
                       
baked cake


 

மூன்றாண்டுகளுக்கு முன் நான் செய்த கேக்குடன் என் மாமியாரின் பிறந்தநாள் 


Monday, 23 December 2013

பொடித்துவலா பொடுத்துவலா.?


                            பொடித்துவலா பொடுத்துவலா.?
                            -----------------------------------------------



பூவையின் எண்ணக்களில் இதுவரை எட்டே பதிவுகள்தான் எழுதி இருக்கிறேன். பலருக்கும் இம்மாதிரி ஒரு வலைத்தளம் இருப்பதும் அது gmb writes எழுதும் என்னால்தான் எழுதப் படுகிறதென்பதும் தெரியாது, அதனால்தானோ என்னவோ இரண்டு மூன்று முறை வலைச் சரத்தில் அறிமுகப் பட்டிருக்கிறது. வெறுமே ஒரு வலைத் தளத்தை உருவாக்கி அதில் பதிவுகள் எழுத வில்லை என்றால்...... என்ன குடியா மூழ்கிவிடும். ? இருந்தாலும் அவ்வப் போது வலைப் பூவை ரட்சித்தல் அவசியம் என்று தோன்றியதால் மீண்டும் சில சமையல் குறிப்புகளுடன் ஆஜர். புகழ் மிக்க சமையல் பதிவாயினிகள் ( பதிவர்களுக்கு எதிர்மறை.?) இருக்கும்போது என் பதிவுகள் சற்றே வித்தியாசமாக இருக்க வேண்டும் அல்லவா.? எந்த காய்கறிகளை சமையலுக்கு உபயோகித்தாலும் அவற்றின் தனிச் சுவை தெரிய வேண்டும் என்று நம்புகிறவன் நான். ஏகப் பட்ட மசாலாக்களைப் போட்டு காய்கறிகளின் சுவை மழுங்கக் கூடாது. சரி. இன்றைக்கு மிகவும் எளிதாக எவரும் செய்யக் கூடிய பொரியல் ( எங்கள் வீட்டில் பொடுத்துவல் அல்லது பொடித்துவல் என்பார்கள். எளிதாகச் செய்ய கொத்தவரங்காய், பீன்ஸ் அல்லது புடலங்காய் உபயோகிக்கலாம்.
கொத்தவரை . அல்லது பீன்ஸ் காம்பு எடுத்து நாறெடுத்து சுத்தமாகக் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள்வும் 5 mm க்கு மேல் இருக்க வேண்டாம். புடலங்காய் இளசாக இருக்க வேண்டும் தோலைச் சீவி சுத்தம் செய்து, உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் புடலை 10 mm சைசில் இருக்கலாம்.

 தேவையான பொருட்கள். தாளிக்க சற்றே தாராளமாக எண்ணை, கடுகு, பச்சை மிளகாய் ( சற்றே பெரிதாக நறுக்க வேண்டும். பச்சை நிறக் காயுடன் சேர்ந்த சமைப்பதால் வித்தியாசம் தெரிய வேண்டும் ) சிறிது உளுத்தம் பருப்பு, சிறிது கடலைப் பருப்பு. துருவிய தேங்காய்  உப்பு.

 செய்முறை
------------
வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளித்து உ. பருப்பு, க, பருப்பு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பருப்புகள் பொன் நிறத்தில் வறுபடவேண்டும். பிறகு நறுக்கிய காயை போடவும்.சிறிது மஞ்சத்தூள் போடவும் சிறிதே நீர் ஊற்றி வேக வைக்கவும். அவ்வப்போது கிளறிக் கொண்டு இருக்கவும்.வேகும் போது உப்பு சேர்க்கவும். காரமில்லாததால் உப்பின் அளவு குறைவாகவே இருக்க வேண்டும். வெந்து நீர் வற்றியதும் துருவிய தேங்காய் சேர்க்கவும்.

 இப்போதெல்லாம் பொடுத்துவலில் பாதாம் பருப்பு நறுக்கிப் போடுகிறோம். சுவை சேரும். (கவனிக்க வேண்டியது குறிப்பிட்ட காய்களை ஒன்றாகச் சேர்த்து சமைக்க வேண்டாம்)

என்ன நண்பர்களே ( நண்பிகளே ) சமைத்துப் பார்த்துக் கருத்துச் சொல்லவும் அடுத்த பதிவு கேக் செய்முறை ( எளிய வசதிகளுடன் )