Saturday 30 August 2014

இதற்கு என்ன பெயர் வைக்கலாம்..?


                        இதற்கு என்ன பெயர் வைக்கலாம்...?
                        --------------------------------------------------
பூவையின் எண்ணங்களில் பதிவிட்டுச் சில காலம் ஆகிறது. அதையும் அவ்வப்போது கவனிக்க வேண்டும் அல்லவா.ஒரு வித்தியாசமான ரெசிபி என்று எழுதினால் அது எல்லோருகும் தெரிந்ததாயிருக்கிறது. இருந்தாலும் இது சாதாரணமாக இடப்படும் ரெசிபி போல் இருக்காது என்ற நம்பிக்கையில்,



வீடுகளில் பொதுவாக சமைக்கும்போது ஒரு சாம்பார். ஒரு ரசம் ஒரு பொறியல் என்று காய்கறிகளின் மாற்றத்தோடு வரும் ஒரு மாற்றத்துக்காக இதை சமைத்துப் பார்க்கலாமே.இதற்குப் பெயர் நீங்களே சூட்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நான் பதிவிட்ட்பின் பலரது வீடுகளிலும் சிறிய மாற்றங்களுடன் இது சமைக்கப் பட்டிருக்கும்

தேவையான பொருட்கள்

தக்காளி ,வெங்காயம் இஞ்சிப்பூண்டு விழுது, பட்டை, லவங்கம்.ஏலக்காய், அளவுகள் நான் கூறப்போவதில்லை. அவரவர் ருசிக்கேற்ப உபயோகிக்க வேண்டியது. மஞ்சப்பொடி. மிளகாய்ப் பொடி, தாளிக்கவும் வதக்கவும் எண்ணை, உப்பு, அரிசி.
 .
செய்முறை

முதலில் அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும் (மீடியம் சைசில்). தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும் குக்கரில் எண்ணை விட்டு தாளிக்கும் போது பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்க்கவும் அதில் வெங்காயத்தை வதக்கவும் வதக்கிய வெங்காயத்தில் சிறிது இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அதன் பின் அரைத்து வைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கவும் இப்படி  வதக்கியபின் அதில் கழுவி வைத்த அரிசியைச் சேர்த்துக் கிளறவும் (ஏறத்தாழ வறுபடும் அளவுக்கு ) நன்றாக மிக்ஸ் ஆனவுடன் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் என்று நீர் ஊற்றி  தேவையான அளவு உப்பு மஞ்சப்பொடி மிளகாய்ப் பொடி சேர்த்துக் குக்கரை மூடி இரண்டோ மூன்றோ விசில் வரும் வரை வேக விடவும்.
வெந்தபின் எடுத்துப் பார்த்தால் ரெடி டு ஈட் சாதம் ரெடி.
வெங்காயத்தை வதக்கும்போது விரும்பினால் காரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் சேர்க்கலாம். விரும்பினால் சிறிது புதினாவையும் அரைத்த்ச் சேர்க்கலாம் இதற்கு உடன் சாப்பிட( தொட்டுக்க) தயிரில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வைக்கலாம் செய்து பார்த்துச் சொல்லுங்கள். என்ன பெயரில் அழைக்கலாம் என்றும் தெரியப் படுத்தவும்              

Tuesday 20 May 2014

பிசி பேளா ஹுளி அன்ன


                                      பிசி பேளா ஹுளி அன்ன
                                    =========================  


இது என்னவோ என்று பயபடவேண்டாம். கர்நாடகாவில் பிரசித்தமான உணவு வகை முதலில் இதன் பொருள் என்னவென்று காண்போம் பிசி என்றால் சூடான , பேளா என்றால் பருப்பு, ஹுளி என்றால் புளி அன்னா என்றால் சாதம் . அதாவது சூடான பருப்பு புளி சாதம் செய்து முடித்தபின் பிசைந்து வைத்த தளராக இருக்கும் சாம்பார் சாதம் போல் இருக்கும்  தனியாக சாதம் சாம்பார் வைத்து கலந்து சாப்பிடுவதற்குப் பதில் ஒரு ரெடி மேட் சாம்பார் சாதம்

 இது இருவிதமான செய்முறைகளில் செய்யலாம் முதலில் அரிசி துவரம் பருப்பு ஒன்றுக்குப் பாதி என்னும் அளவில் குக்கரில் வேகவைக்கப் படுகிறது ஒன்றுக்கு மூன்று என்று நீரின் அளவை நிர்ணயிக்கலாம் தளரான சாதம் தயார்.
ஒரு கடாயில்எண்ணை ஊற்றித் தாளித்து தேவைப்பட்ட காய்கறிகளை நறுக்கியதை வதக்கி எடுக்கவும் ( பிரியப் பட்ட காய்கறிகளை உபயோகிக்கலாம்) பொதுவாக சின்ன வெங்காயம் தக்காளி  காரட் முருங்கைக்காய் எடுத்துக் கொள்ளலாம் வதக்கி  வைத்த காயில் அவரவர் ருசிக்கேற்ப புளிக் கரைசலை ஊற்றி உப்பு மஞ்சப் பொடி போட்டு கடாயில் காய்களை வேகவிடவும் இந்தப் புளிக் குழம்பை வேக வைத்த சாதத்தில் ஊற்றி நன்கு கிளறவும் இதில் நான் நீரின் அளவோ புளியின் அளவோ தரவில்லை. சிலருக்கு  கெட்டியாக இருந்தால் பிடிக்கும். சிலருக்குத் தளராக இருந்தால் பிடிக்கும் ஆனால் பொதுவாக பிசிபேளா ஹுளி அன்னா சற்றுத் தளராகவே இருக்க வேண்டும். சாதம் புளிக் கரைசலில் பிசி பேளா பொடி போட்டு இறக்கி வைக்கலாம்.
ஆனால் புளிக்கரைசலிலேயே மல்லி மிளகாய் வெந்தயம் உ. பருப்பு வதக்கிப்மிக்சியில் சிறிது தேங்காய் சேர்த்து அரைத்துக் கொண்டு  கலக்கி அதை வேகவைத்த சாதத்தில் கலக்கவும் செய்யலாம் பிசி பேளா பொடிக்கு பதில் இவ்வாறு செய்யலாம்  இறக்கி வைத்த அன்னத்தில் சிறிது நெய் ஊற்றி கருவேப்பிலையும் தூவலாம்

இரண்டாவது செய்முறையில் குக்கருக்குப்பதில் ஒருபெரிய பாத்திரத்தில் அரிசி பருப்பு வதக்கிய காய்கறிகளுடன் புளிக் கரைசலையும் ஊற்றி உப்பு மஞ்சள் பொடி போட்டு  ஒன்றாக வேகவைக்கலாம் நன்றாக வெந்து வரும் சமயம் சாம்பார்பொடியுடன் அரைத்து வைத்த தேங்காயையும் சேர்க்கலாம்
இறக்கி வைத்து நெய்யில் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கலாம்          

Saturday 26 April 2014

கோபி மஞ்சூரியன்


                                                     கோபி மஞ்சூரியன்
                                                      -------------------------


பெயரிலிருந்தே தெரிகிறது இது ஒரு இந்திய சீனச் சமாச்சாரம் என்று. கோபி என்பது நாம் தமிழில்(?) காலிஃப்லவர் என்று அழைக்கும் பூ. மஞ்சூரியா சீன தேசத்தின் ஒரு பகுதி. அண்மையில் நாங்கள் கேரளா ஒத்தப்பாலத்தில் மஹாராஜாவின் கொட்டாரம் என்று அழைக்கப் பட்ட விடுதியில் தங்கினோம். இரவு உணவுக்கு முன் ஸ்டார்டராக இந்த கோபி மஞ்சூரியன் ஆர்டர் செய்தார்கள். விலை மஹா ராஜாக்கள் கொடுக்கக் கூடியதே. ஒரு ப்லேட் ரூ.200-/ என்று நினைக்கிறேன் அதை உண்ணும்போது என் மனைவி செய்யும் கோபி மஞ்சூரியன் நினைவுக்கு வந்தது. பெங்களூர் திரும்பியதும் அவளிடம் அதை சமைக்கச் சொல்லி கேட்டு உண்டேன். அதன் செய்முறையைத்தான் பூவையின் எண்ணங்களில் பகிர்ந்து கொள்கிறேன் (பின் பதிவில் பதார்த்தத்தையா பகிர முடியும்?)

 நல்ல காலிஃப்ளவர் வாங்கிக் கொள்ளுங்கள். மஞ்சள் நிறத்தில் இருக்கக் கூடாது என்கிறாள் என் மனைவி. பூவை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும் நல்ல நீரைக் கொதிக்க வைக்கவும் ( சிறிது உப்பு கலந்து) அதில் நறுக்கிய பூத்துண்டுகளைப் போட்டு மூடி வைக்கவும் அடுப்பை அணைத்து விட்டு அப்படியே அதை சுமார் இருபது நிமிடங்கள் வரை வைக்கவும்.  அது கொதிநீரில் வேகும் போது .............
 ஒரு பாத்திரத்தில் சிறிது மைதாமாவையும் சிறிது கார்ன் ஃப்ளௌரையும் சிறிது சோயா சாசையும் சிறிது இஞ்சிப் பூண்டு விழுதையும் தேவைக்கேற்ப . ஒரு சிட்டிகை மிளகாய்ப் பொடியையும் தேவையான அளவு உப்புடன் கலந்து பஜ்ஜிக்கு இடும் மாவு பதம் வருமாறு நீர் ஊற்றி கலக்கவும் கடாயில் எண்ணை ஊற்றி அது நன்கு சூடானதும், வேகவைத்த காலிஃப்ளவர்களை நன்கு நீர் வற்றப் பிழிந்து எடுத்து பஜ்ஜிமாவில் கலக்கவும் பின் அவற்றை எண்ணையில் பொரித்து எடுக்கவும்
க்ரேவி செய்ய
--------------
வெங்காயம் பச்சைமிளகாய் ( காரத்துக்கு தக்கபடி)நறுக்கியது  சிறிது,இஞ்சிப் பூண்டு விழுது இவற்றை எண்ணையில் நன்கு வதக்கவும்  சிறிது கார்ன் மாவை நீரில் கலக்கி ( சீராக கட்டி யில்லாமல்) வதக்கிய கலவையில்  கடாயில் தேவையான உப்பு இட்டு ஊற்றவும் ., க்ரேவியின் பதம் தேவைப்பட்ட அளவு வரும் வரை கிளரவும், சரியானபதம் வரும்போது பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டுக்கிளரவும் சிறிது அள்வு சோயாசாஸும் சேர்க்கவும்  காலிஃப்ளவர் துண்டுகள் க்ர்ரெவியில் நன்றாக கலந்தபின் கலவையில் டொமாடோ சாஸ் கலக்கவும்
கோபி மஞ்சூரியன் dry யாக இருக்கவேண்டுமானால் க்ரேவியில் நீரின் அளவைக் குறைக்கவும் . க்ரேவியுடன் வேண்டுமென்றால் க்ரேவி கூழான பதம் வருமாறு தயாரிக்கவும்
நன்கு பொடியாக அறுத்த கொத்துமல்லி தழையைச் சேர்க்கவும்
சிலருக்கு காரசாரமாக மஞ்சூரியன் இருக்க வேண்டுமானால் நறுக்கிய பச்சை மிளகாயின் அளவைக்கூட்டலாம் சிலருக்கு இஞ்சிப் பூண்டு வாசனையும் சுவையும் குறைவாக இருக்கப் பிடிக்கும். அதற்கேற்ப அவற்றின் அளவை சேர்க்கலாம் விரும்பிய சுவையில் கோபி மஞ்சூரியன் தயார்.     

       
   

    

Thursday 24 April 2014

ஒரு புதுமையான மாங்கோ ஜூஸ்


                                             ஒரு புதுமையான மாங்கோ ஜூஸ்
                                            ----------------------------------------------------



பூவையின் எண்ணங்கள் வலைத்தளம் என்னை ஏன் வருகைதந்து பதிவெழுதுவதில்லை என்று கேட்கிறாற்போலிருந்தது, அதுவும் என் வலைத்தளம்தானே. கவனிக்காவிட்டால் சவலையாகிவிடும். இருந்தாலும் எழுதுவது சற்று வித்தியாசமான உணவுப் பொருள் பற்றி இருக்க வேண்டாமா. கோடைக் காலம் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. மாம்பழ சீசன் தொடங்குகிறது மாங்கோ ஜூஸ் குடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால் நான் சாதாரண மாங்கோ ஜூஸ் பற்றி எழுதப் போவதில்லை. சீசன் சூடு பிடிக்கும் முன் மாங்காய்கள் மார்க்கெட்டில் வந்திருக்கும் . கோடைக்குக் குளுமையாக ஒரு ஜூசின் ரெசிப்பி தருகிறேன் செய்து பாருங்கள்.
நல்ல முற்றிய மாங்காயை குக்கரில் ஓரிரு நிமிஷங்கள் வேக வைக்கவும் குக்கர் இல்லாவிட்டால் கொதிக்கும் நீரில் சிறிது நேரம் வேக வைக்கலாம் வெந்த மாங்காயின் தோலை எடுத்து மாங்காய்ப் பல்ப்பை மட்டும் எடுத்து மிக்சியில் அடித்து கூழ் போலாக்கிக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீரில் கரையும் வரை கொதிக்க வைக்கவும் அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் மாங்காய்ப் பல்ப்பை அதில் நன்றாகக் கலக்கவும் கொஞ்சம் சுக்குப் பொடி. ஏலக்காய்ப் பொடி சிறிது வறுத்து அரைத்த சீரகப் பொடி போட்டு கலக்கவும் . கலக்கிய ஜீசை பாட்டிலில்  நிரப்பி ஃப்ரிட்ஜில் வைக்கவும் தேவைப்பட்ட போது நீரில் கலக்கிக் குடிக்கவும்
 இதில் நான் அளவு ஏதும் தரவில்லை. நாக்கின் ருசியைக் கண்பார்த்துக் கை செய்யவேண்டும்
ஆரோக்கியமான குளிர்பானம் /