Wednesday 25 December 2013

அவனின்றி கேக் பேக்கலாம்


                            அவனின்றி கேக் “பேக்”கலாம்
                            ------------------------------------------


சென்ற பதிவில் கேக் செய்யும் முறை பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். கேக் செய்முறை விளக்கங்கள் ஏராளமாக வந்திருக்கும். கிருஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டின் போது செய்து மகிழ இவனது கேக் செய்முறை. இதில் என்ன வித்தியாசம் என்றால் மிகச் சாதாரண உபகரணங்களுடன் அவனின்றி(oven) கேக் செய்யலாம்.

கேக் செய்யத் தேவையான பொருட்கள்.
   
மைதா மாவு, சர்க்கரை, முட்டை வெண்ணை, சிறிது பாலேடு, வெனிலா எசென்ஸ், முந்திரிப்பருப்பு பேக்கிங் சோடா
இவற்றின் அளவுகள் வெண்ணை, சர்க்கரை மைதா இம்மூன்றும் ஒரே எடையில் இருக்கவேண்டும். உ-ம் கால் கேஜிமைதா என்றால் கல் கேஜி வெண்ணையும் கால் கேஜி சர்க்கரையும் தேவைப் படும். வீட்டில் எடை போட்டுப் பார்ப்பது கடினம் என்பதால் ஒரு டம்ப்ளர் மாவுக்கு அதற்கும் சற்றுக் குறைவாகச் சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம். நான் டம்ப்ளர் என்று சொல்லும் போது அது 250 ml ( கால் லிட்டர் அளவு கொண்டது, வெண்ணை கால் கேஜிக்கும் சற்று குறைவாக இருக்கும். . இந்த அளவுக்கு இரண்டு முட்டைகள் தேவை படும்.

முதலில் முட்டையை உடைத்து வெள்ளை மஞ்ச்ள் தனித்தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளையை நன்றாகச் சிலும்பவும் நன்றாகச் சிலும்பிய முட்டையின் வெள்ளை பொங்கி எழுந்து ஒரே நுரைபோல் காண வேண்டும். சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும் பொடித்த சர்க்கரையை வெண்ணையில் நன்றாக மிக்ஸ் செய்யவும் மைதாமாவில் சிறிது ( முக்கால் டீஸ்பூன்.?) பேக்கிங் சோடாவை நன்றாகக் கலக்கவும் பேக்கிங் சோடா தூள் பரவலாக நன்றாகவே கலந்திருக்க வேண்டும்.

வெண்ணை சர்க்கரை மிக்சில் கொஞ்சம் கொஞ்சமாக மைதாமாவைப் போட்டு கிளறவும். இந்த கிளறல்தான் சற்றுக் கடினமான வேலை. இந்தக் கலவை இறுக்கம் அதிகம் போல் தோன்றினால் அதில் சிறிது பாலேடு கலக்கலாம். நன்றாகக் கிளறியபின் அதில் அடித்து வைத்த முட்டையின் வெள்ளையைக் கலக்கவும் அதன் பிறகு முட்டையின் மஞ்சளைச் சேர்த்துக் கலக்கவும் இந்தக் கலவை ஒரு homogeneous  mix  ஆக இருக்க வேண்டும் அதில் பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கடைசியில் ஒரு டீஸ்பூன் வெனிலா எஸ்ஸென்ஸையும் கலக்கினால் கேக் செய்ய “ பாட்டர் “ரெடி.

பொதுவாக கேக் செய்ய oven  வேண்டுமென்பார்கள். அது இல்லாமலேயே கூட கேக் செய்யலாம். குக்கரில் வரும் சாதம் வைக்க வரும் பாத்திரத்தின் உட்புறம் சிறிது வெண்ணை எடுத்து தடவவும் அப்படித்தடவிய பாத்திரத்தில் மைதா பொடி தூவி அது தடவிய வெண்ணையில் ஒட்டிக் கொள்ளுப்படியாக இருக்கும். அதாவது பாத்திரத்தின் உட்புறம் மாவு பூசிக் கொண்ட மாதிரி இருக்க வேண்டும். இந்தப் பாத்திரத்தில் கேக் பாட்டரை போட்டு ( ஒரு இன்ச் உயரத்துக்கு ) சமமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் முக்கியமாக பாட்டரில் காற்றுத் துளைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
இப்போது கேக் பேக் செய்யத்தயார். குக்குரின் (நான் பான் (pan) உபயோகித்தேன்) உள்ளே இந்தப் பாத்திரம் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது பாத்திரம் குக்கரின் எந்த பகுதியிலும் தொடாதபடி  அடியில் குடம் வைக்கும் base கம்பி வைத்து அதன்மேல் வைக்க வேண்டும் முக்கியமாக மிதமான தணலில்தான் கேக் பேக்காக வேண்டும். குக்கரின் gasket-ஐ எடுத்து விட்டு குக்கரை மூடவும்.வெயிட் வைக்கக் கூடாது இரண்டு நிமிட சூட்டுக்குப் பின் ஸ்டவ்வை சிறிதாக்கி அந்த சூட்டில் கேக் வேகட்டும். பதினைந்து இருபது நிமிடங்களில் கேக்கின் வாசனை வரும். குக்கரின் மூடியை எடுத்து கேக் பேக்காகி இருக்கிறதா என்று சோதிக்கவும் கேக் பாட்டரில் ஒரு கத்தியைச் சொறுகினால் ஒட்டக் கூடாது. ஒட்டினால் இன்னும் சிறிது நேரம் கழிந்து சோதனை செய்யலாம். நன்றாக பேக் ஆனபின் எடுத்து  ஒரு வட்டத்தட்டில் கவிழ்க்கவும் . நன்றாக பேக் ஆன கேக் பொன்னிறமாக இருக்கும்

கைவேலை தெரிந்தவர்கள் அதன் மேல் ஐசிங் செய்து அலங்கரிக்கலாம்.  கேக் அவனே இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே கேக் தயாரிக்கும் முறை பற்றிக் கூறி இருக்கிறேன். எங்கள் வீட்டில் நான் செய்யும் இம்மாதிரி கேக் எல்லோராலும் விரும்பி உண்ணப் படும்

கிருஸ்துவின் பிறந்த நாளில் பொதுவாக கேக் செய்யப் படுகிறது. அதுவே எல்லோர் பிறந்த நாளிலும் கேக் செய்யும் பழக்கமாகிவிட்டதோ. அண்மையில் நண்பர் வைகோவின் பதிவில் பெரியவரின் சிந்தனையாக படித்தது நினைவில் வருகிறது. ஜேஷுவா என்னும் பெயர் மருவி ஏசு என்று உச்சரிக்கப் பட்டு வருகிறது. இந்த ஏசுவே ஈசன் ஆகவும் மருவலாம். கிருஸ்து என்னும் பெயர் மருவி கிருஷ்டினன்  ஆகவும் நினைக்கலாம் ஆக ஏசு கிருஸ்து ஈச கிருட்டினன் ஆகவும் கொள்ளலாம் என்று படித்த நினைவு. ஆக இந்த கேக்செய்முறை எல்லா தெய்வங்களுக்கும் சமர்ப்பிக்கப் படுகிறது.

முட்டையின் வெள்ளையை சிலும்ப  
முட்டை வெள்ளை சிலும்பியது  
குக்கர் பான்
                         
குக்கர் பாத்திரம்  

 
குக்கர் பான் பாத்திர சப்போர்ட்டுடன்

 
கேக் பாட்டர் பாத்திடத்தில்

கேக் பாட்டர் போடுமுன் பாத்திரம்
கேக் பாட்டர் ஸ்டவ்வில் மூடும் முன்
cake pieces
                       
baked cake


 

மூன்றாண்டுகளுக்கு முன் நான் செய்த கேக்குடன் என் மாமியாரின் பிறந்தநாள் 


Monday 23 December 2013

பொடித்துவலா பொடுத்துவலா.?


                            பொடித்துவலா பொடுத்துவலா.?
                            -----------------------------------------------



பூவையின் எண்ணக்களில் இதுவரை எட்டே பதிவுகள்தான் எழுதி இருக்கிறேன். பலருக்கும் இம்மாதிரி ஒரு வலைத்தளம் இருப்பதும் அது gmb writes எழுதும் என்னால்தான் எழுதப் படுகிறதென்பதும் தெரியாது, அதனால்தானோ என்னவோ இரண்டு மூன்று முறை வலைச் சரத்தில் அறிமுகப் பட்டிருக்கிறது. வெறுமே ஒரு வலைத் தளத்தை உருவாக்கி அதில் பதிவுகள் எழுத வில்லை என்றால்...... என்ன குடியா மூழ்கிவிடும். ? இருந்தாலும் அவ்வப் போது வலைப் பூவை ரட்சித்தல் அவசியம் என்று தோன்றியதால் மீண்டும் சில சமையல் குறிப்புகளுடன் ஆஜர். புகழ் மிக்க சமையல் பதிவாயினிகள் ( பதிவர்களுக்கு எதிர்மறை.?) இருக்கும்போது என் பதிவுகள் சற்றே வித்தியாசமாக இருக்க வேண்டும் அல்லவா.? எந்த காய்கறிகளை சமையலுக்கு உபயோகித்தாலும் அவற்றின் தனிச் சுவை தெரிய வேண்டும் என்று நம்புகிறவன் நான். ஏகப் பட்ட மசாலாக்களைப் போட்டு காய்கறிகளின் சுவை மழுங்கக் கூடாது. சரி. இன்றைக்கு மிகவும் எளிதாக எவரும் செய்யக் கூடிய பொரியல் ( எங்கள் வீட்டில் பொடுத்துவல் அல்லது பொடித்துவல் என்பார்கள். எளிதாகச் செய்ய கொத்தவரங்காய், பீன்ஸ் அல்லது புடலங்காய் உபயோகிக்கலாம்.
கொத்தவரை . அல்லது பீன்ஸ் காம்பு எடுத்து நாறெடுத்து சுத்தமாகக் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள்வும் 5 mm க்கு மேல் இருக்க வேண்டாம். புடலங்காய் இளசாக இருக்க வேண்டும் தோலைச் சீவி சுத்தம் செய்து, உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் புடலை 10 mm சைசில் இருக்கலாம்.

 தேவையான பொருட்கள். தாளிக்க சற்றே தாராளமாக எண்ணை, கடுகு, பச்சை மிளகாய் ( சற்றே பெரிதாக நறுக்க வேண்டும். பச்சை நிறக் காயுடன் சேர்ந்த சமைப்பதால் வித்தியாசம் தெரிய வேண்டும் ) சிறிது உளுத்தம் பருப்பு, சிறிது கடலைப் பருப்பு. துருவிய தேங்காய்  உப்பு.

 செய்முறை
------------
வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளித்து உ. பருப்பு, க, பருப்பு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பருப்புகள் பொன் நிறத்தில் வறுபடவேண்டும். பிறகு நறுக்கிய காயை போடவும்.சிறிது மஞ்சத்தூள் போடவும் சிறிதே நீர் ஊற்றி வேக வைக்கவும். அவ்வப்போது கிளறிக் கொண்டு இருக்கவும்.வேகும் போது உப்பு சேர்க்கவும். காரமில்லாததால் உப்பின் அளவு குறைவாகவே இருக்க வேண்டும். வெந்து நீர் வற்றியதும் துருவிய தேங்காய் சேர்க்கவும்.

 இப்போதெல்லாம் பொடுத்துவலில் பாதாம் பருப்பு நறுக்கிப் போடுகிறோம். சுவை சேரும். (கவனிக்க வேண்டியது குறிப்பிட்ட காய்களை ஒன்றாகச் சேர்த்து சமைக்க வேண்டாம்)

என்ன நண்பர்களே ( நண்பிகளே ) சமைத்துப் பார்த்துக் கருத்துச் சொல்லவும் அடுத்த பதிவு கேக் செய்முறை ( எளிய வசதிகளுடன் )   

Saturday 7 September 2013

புட்டும் கடலையும்


                                          புட்டும்  கடலையும்
                                           --------------------------



பூவையின் எண்ணங்களில் சமையல் குறிப்புகள் எழுதி நாட்கள் பல ஆகின்றன. நான் சற்றும் எதிர்பாராவகையில் பூவையின் எண்ணங்கள் பதிவு மூன்று முறையோ அதிகமாகவோ வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.வாசகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. நான் எழுதும் சமையல் குறிப்புகளைப் படிப்பதோடு நிற்காமல் செய்தும் பார்த்துக் கருத்திடக் கோருகிறேன். இந்த முறை கேரளத்தில் பிரசித்தி பெற்ற புட்டு பற்றியும் அதற்குக் கூட்டாக கடலையும் செய்வது பற்றி எழுதுகிறேன். புட்டு என்றவுடன் “புட்டுக்கு மண் சுமந்த ஈசனின்திருவிளையாடல் நினைவுக்கு வரலாம். இந்தப் புட்டு அந்தக் காலப் புட்டுதானா தெரியாது. எந்தக் காலப் புட்டானால் என்ன.? இது கேரள பாரம்பரிய ஒரு உணவு வகை.இதன் செய்முறையைக் கூறுகிறேன்

 செய்வதற்குத் தேவையான புட்டு மாவு தயாரிக்கும் முறை.

நல்ல பச்சரிசியை நன்றாகக் கழுவிநீரை வடிகட்டிக் காய வைக்கவும் காயவைக்கும்போது அது வெடவெடவென்று உலறும் முன் சற்றே ஈரப்பதம் இருக்கும்போதே அரைத்து சலித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை லேசாக வறுத்து வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம் கேரளாவில் சிவப்பு புழுங்கல் அரிசி உபயோகிக்கிறார்கள்.கடைகளில் புட்டுப் பொடி என்றே விற்கிறார்கள்.


புட்டுக் குழல்
இந்தப் புட்டுப் பொடியில் சிறிதே தேவைக்கேற்ற உப்பு கரைத்த நீர் ஊற்றி கலக்க வேண்டும். நீரின் அளவு புட்டு மாவைக் கையில் பிடித்தால் பிடிப்பு கிடைக்க வேண்டும். அதேசமயம் பிடியைத் தளர்த்தினதும் கெட்டிப் படாமல் இருக்க வேண்டும். இந்த செய்முறை சரியாக வராவிட்டால் புட்டு வேக வைத்தபின் ஆங்காங்கே கெட்டியாக இருக்கும் வாய்ப்புண்டு.இதை ஆவியில் வேகவைக்கப் புட்டுக் குழல்கள் கிடைகின்றன. புட்டுக்குழலில் சிறிது மாவை(ஒன்று முதல் ஒன்றரை அங்குல கனம் வரும்வரைத் திணிக்கவும். அதன் மேல் துருவிய தேங்காய் போடவும். மேலும் அதன் மேல் முதலில் சொன்னபடி மாவைத் திணிக்கவும். பின் தேங்காய்த் துசுவலைச் சேர்க்கவும். இப்படியே புட்டுக் குழாய் கழுத்துவதுவரை நிரப்பவும் பிறகு குழலின் மூடியால் மூடவும். . புட்டுக் குழலின் கீழ்ப் பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி அதன் மேல் குழலை வைத்து ஆவியில் வேக வைக்கவும் வெந்து எடுக்கும்போது புட்டு உருளைகள் அழகாக வெளிவரும்.

அவித்த புட்டு உருளைகள்.       

புட்டுக் குழல் கிடைக்கவில்லை என்றால் இட்லிப் பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல் இட்லிக் குழியில் மாவையும் தேங்காய்த் துருவலையும் கலந்து  ஆவியில் வேக வைக்கலாம். எப்படிச் செய்தாலும் அது வயிற்றுக்குள் போகும் போது ஷேப்பே மாறிவிடும். இந்த ஆவியில் வெந்த புட்டினை உண்ணும் விதம் அவரவர் விருப்பம் போல் இருக்கும். சாதாரணமாக  இந்தப் புட்டை நெய் சர்க்கரை வாழைப்பழம் இவற்றுடன் பிசைந்து சாப்பிடுதல் ஒரு முறை.
இன்னொரு முறையில் கொண்டைக் கடலை வேக வைத்துக் குழம்பு செய்து அதனுடன் உண்ணலாம்.

கொண்டைக் கடலையை முன்னிரவே நீரில் ஊறவைத்து அதை குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணை ஊற்றி தாளிதம் செய்யும்போது பொடியாய் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து உப்பு மஞ்சப் பொடி மிளகாய்ப் பொடி மல்லிப்பொடி இவற்றுடன் சிறிது நசுக்கிய இஞ்சி கறுவேப்பிலை சேர்த்து வதக்கவும் அதன் பின் சிறிது நீரூற்றி வேகவைத்தக் கடலையையும் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும். இதைப் புட்டுடன் கலந்து சாப்பிடலாம்
சிலர் கடலைக்குப் பதில் பாசிப்பயரை உபயோகிக்கிறார்கள்
.
புட்டுக் கடலையோ, புட்டுப் பழமோ காலை உணவாகும் போது உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் மதியம் வரை பசியை விரட்டிவிடும்.

என்ன நண்பர்களே செய்து பார்த்துக் கருத்து தெரிவிக்கலாமே.         


 


 



  
 

 



Sunday 16 June 2013

முளைப் பயறு கூட்டு...



                                                    முளைப் பயறு  கூட்டு...
                                                     -----------------------------



இன்றைக்கு எளிமையான , ருசியான, உடலுக்கு ஏற்றதான ஒரு ரெசிபி.   பாசிப்பயறில் தண்ணீர் ஊற்றிவைத்து மறுநாள் நீரைவடித்து வைத்தால் மறுநாள் பயறு முளை விட்டிருக்கும். முளைவிட்ட பயறை வேகவைக்கவும். வெங்காயத்தை  எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அந்த அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும் கடாயில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு, சிறிது சீரகம் போட்டுத் தாளிக்கவும் அதில் நறுக்கிய வெங்காயத்தையும் நறுக்கிய தக்காளியும்  போட்டு வதக்கவும். அதில் வெந்த பயறைப் போட்டு சிறிது நீர் ஊற்றி கொஞ்சம் மஞ்சத்தூள் தேவையான உப்பு சிறிது மிளகாய்த் தூள் போட்டுக் கொதிக்க விடவு.ம்.நன்றாகக் கொதி வந்ததும் இறக்கி வைத்து உபயோகிக்கவும்.
( விருப்பமுள்ளவர்கள் தாளிதத்தில் சிறிது சோம்பு சேர்க்கலாம் ) 

இதில் நான் அளவுகள் கூறவில்லை.எத்தனை பேருக்கு என்று பார்த்து அளவுகள் எடுத்துக் கொள்ளலாம். நீர் நிறைய விட்டு குழம்பாகவோ, நீரைக் குறைத்து சிறிது கெட்டியாகவும் வைக்கலாம். சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாய் இருக்கும். செய்து பார்த்துக் கருத்து சொல்லலாமே.  





Friday 7 June 2013

பாகற்காய் பொரிச்ச குழம்பு....!


                                  பாகற்காய் பொரிச்ச குழம்பு....!
                                 -------------------------------------------




 நான் மொளகூட்டல் இஞ்சிப்புளி செய்முறையை கடந்த பதிவில் எழுதி இருந்தேன். திரு. அப்பாதுரை செய்து பார்த்து நன்றாக இருந்தது என்று கூறிவிட்டு பொறிச்ச குழம்பு போலிருந்தது என்றார். என் மனைவி அவள் சமைக்கும் பொறிச்ச குழம்பின் செய்முறையைக் கூறினாள் This PORICHA KUZHAMPU is entirely different. !

பாகற்காயை அதன் கசப்பு தெரியாதபடி ருசியாக சமைக்க இந்த முறை.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு- சுமார் இரண்டு கைப்பிடி அளவு.
புளிக் கரைசல் ஒன்றரைக் கப்(அதிக நீராகவோ , அல்லது கெட்டியாகவோ கூடாது. )
பொடியாய் நறுக்கிய பாகற்காய் ஒரு கப்.
தனியா,மூன்றிலிருந்து நான்கு டீஸ்பூன்
 உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, ஒவ்வொன்றிலும் ஒரு டீஸ்பூன்
வெந்தயம் கால் டீஸ்பூன், சிறிது பெருங்காயம் ஐந்தாறு காய்ந்த மிளகாய்
தேங்காய் சிறிது
உப்பு தேவையான அளவு.
தாளிக்கக் கடுகு கறிவேப்பிலை, துருவிய தேங்காய் ஒரு ஸ்பூன், எண்ணை
சிறிது வெல்லம் ( விரும்பினால் )


செய் முறை.
தனியா உ. பருப்பு, க. பருப்பு,வெந்தயம் காய்ந்தமிளகாய், பெருங்காயம் இவற்றை எண்ணையில் வறுத்து எடுத்து தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்

துவரம் பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
புளிக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் ஏற்றிக் கொதிக்க விடவும் நறுக்கிய பாகற்காயை அதில் போட்டு வேக விடவும். சிறிது மஞ்சத்தூள் உப்பு சேர்க்கவும் புளியின் பச்சை வாசனை போனபிறகு , பாகற்காய் வெந்தபிறகு வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்க்கவும்சிறிது விட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்க்கவும் எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து எண்ணையில் கடுகு தாளிக்கும்போது துருவிய தேங்காயையும் சேர்த்து நன்றாக வதக்கித் தாளிக்கவும். ( அவரவர் ருசிக்கு ஏற்றபடி தேவைப் பட்டால் பொறிச்ச குழம்பை இறக்கும் முன் சிறிது வெல்லம் சேர்க்கலாம்)
சாதாரணமாக துவரம் பருப்பு போட்டுச் செய்யும் தக்காளி ரசத்தை , ஒரு மாற்றத்துக்கு பாசிப் பருப்பு போட்டு செய்து பாருங்களேன். சூப்பராக இருக்கும்.  

Sunday 2 June 2013

மொளகூட்டல் இஞ்சிப் புளி.

                           
                                            மொளகூட்டல்  இஞ்சிப் புளி
                                           -----------------------------------------


பூவையின் எண்ணங்களில் இன்று மொளகூட்டல் ( அல்லது மிளகூட்டலா.?) செய்யும் முறையைக் கவனிப்போம். சாதத்துடன் பிசைந்து உண்ண செய்யும் குழம்பு இது. பொதுவாக பாலக்காட்டுப்பக்கம் செய்கிறார்கள். புளி காரம் இல்லாத குழம்பு. தொட்டுக்கொள்ள காரசாரமாக  இஞ்சிப் புளி என்று செய்து வைப்பார்கள். கேரள விருந்துகளில் இஞ்சிப் புளி ஃபேமஸ் சில குறிப்பிட்ட காய்கறிகளில் மொளகூட்டல் கூடுதல் சுவை கொடுக்கும். உதாரணத்துக்கு  உருளைக் கிழங்கு, காபேஜ். பீன்ஸ் காரட் போன்றவைகளை உபயோகிக்கலாம். 



இனி செய்முறை பார்ப்போம். அளவுகள் அவரவர் வைக்கும் குவாண்டிடியைப் பொறுத்தது. நான் கூறும் அளவு நாலவர் அடங்கிய ஒரு குடும்பத்துக்கு ஒரு வேளைக்கு வரும்.
தேவையான பொருட்கள்.
துவரம் பருப்பு மூன்று கைப்பிடி அளவு
உருளைக் கிழங்கு சுமாரான சைசில் மூன்று
கேபேஜ் நூறிலிருந்து நூற்றைம்பது கிராம்
தேங்காய் கால் மூடி
காய்ந்த மிளகாய் ஐந்து
சீரகம் முக்கால் டீஸ்பூன்
தாளிக்க எண்ணை கடுகு கறிவேப்பிலை.
உப்பு தேவையான அளவு.


செய்முறை

துவரம் பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும் குக்கரில் துவரம் பருப்பை வேக வைக்கும் போதே தோல் நீக்கி நறுக்கிய உருளைக் கிழங்கையும் பொடியாக நறுக்கிய காபேஜையும் சேர்த்து வேக வைக்கலாம்.
தேங்காய் மிளகாய் சீரகம் இவற்றை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் . .
வெந்தபருப்பை சிறிது நீர் கலந்து கொதிக்க வைக்கவும் வந்த கொதியில் வெந்து நறுக்கிய காய்களைப் போடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஓரிரண்டு கொதிக்குப் பிறகு அரைத்து வைத்த தேங்காய்க் கலவையைச் சேர்க்கவும் நன்கு கொதித்தபிறகு இறக்கி வைத்து தாளிக்கவும்(புளி காரம் இல்லாததால் உப்பு போடும் அளவில் கவனம் தேவை.) சாதத்துடன் பிசைந்து சாப்பிட மொளகூட்டல் ரெடி.! 


இதன் கூட தொட்டுக்கொள்ள இஞ்சிப் புளி செய்ய தேவையான பொருட்கள்.

திக்கான புளிக் கரைசல் ஒரு கப்
பச்சை மிளகாய் 8 லிருந்து 10
இஞ்சி 25 கிராம்
நல்லெண்ணை தேவையான அளவு.
மஞ்சத்தூள் கால் ஸ்பூன்.
மிளகாய்த்தூள் கால் ஸ்பூன்
தனியாத்தூள் அரைஸ்பூன்.
கடுகு கறிவேப்பிலை.
வறுத்துப் பொடித்த எள் மூன்று ஸ்பூன்
சிறிது வெல்லம்.


செய்முறை
இஞ்சி பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.. கடாயில் தாராளமாக நல்லெண்ணை ஊற்றி கடுகு போட்டுப் பொரிந்தவுடன் இஞ்சி பச்சைமிளகாய் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். அதில் புளிக்கரைசலை ஊற்றவும் நன்றாகக் கொதிக்க வேண்டும். அதில் மஞ்சத்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள்  இடவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கொதிக்கும்போதே சிறிது வெல்லம் சேர்க்கவும். நன்றாகக் கொதித்து திக்கான பதம் வரும்போது இறக்கி வைக்கும்முன் பொடித்த எள்ளையும் சேர்க்கவும். இஞ்சி புளி தயார்.

மொளகூட்டல் இஞ்சிப் புளி காம்பினேஷன் சுவையாய் இருக்கும்.

செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லலாமே.    
 

 
 
 

Saturday 13 April 2013

இனிய சித்திரை


                                     இனிய சித்திரை.
                                     ----------------------



சித்திரையே சித்திரையே
இத்தனை நாள் எங்கிருந்தாய் ?

மாசி பங்குனி பின் மறைந்திருந்தேன்
தையில் பாதை மாறி பயணம் புகுந்த
பகலவன் மேட ராசிவரக் காத்திருந்தேன்.

நீ வந்தால் ஆண்டு பிறக்கிறது
இவ்வாண்டோ “விஜயவருஷம்
பங்குனியின் பனித்திரை விலக
தகத்தகாய சூரியன் வருமுன்னே
விடியலில் விஷுக் கணி கண்டு
காணும் நலமே தொடர துயர்
துடைப்போம்,அனைவரும் வாழ
வாழ்த்துவோம், வாழ்த்துக்கள்.


இன்று வருஷப் பிறப்பு. எல்லோரும் இன்பமாய் இருக்கும் நேரம்  அதில் இனிப்பு சேர்க்க ஒரு எளிய இனிப்பு செயல் முறை.
தேவையான பொருட்கள்.:-கடலை மாவு ஒரு கப்.
                         பொடித்த சர்க்கரை ஒரு கப்
                         பொடியாய் நறுக்கிய முந்திரிப் பருப்பு
                         கொஞ்சம் பொடித்த ஏலக்காய்த் தூள்
                         நெய் அரை கப்


செய்முறை.:-

வாணலியில்  கடலை மாவை நெய்யில் வறுக்கவும். கை விடாமல் கிளறும்போதுவாசனை வரும். ( மாவு கரியக் கூடாது. )  அடுப்பை அணைத்துஅதில் பொடித்து வைத்த சர்க்கரையை கலந்து கிளறவும். அதில் பொடித்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பையும் ஏலக்காய்த் தூளையும் சேர்க்கவும். சூடு ஆறும் முன்பாக  சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

ருசியான பேசின் லட்டு தயார்.
 

 

Tuesday 9 April 2013

சென்னா பட்டூராவா, சோலே பட்டூராவா





சென்னா பட்டூராவா, சோலே பட்டுராவா.?


சென்னா பட்டூராவா , சோலே பட்டூராவா.?
---------------------------------------------------------

பெயர் என்னவாக இருந்தால் என்ன..?இந்தப் பதிவைப் படித்து முடித்த பிறகு பெயரை நீங்களே வைக்கலாம். பல பல வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்திருந்தோம். பெசண்ட் நகரில் அஷ்ட லக்ஷ்மி கோயில் தரிசனம் செய்ய வந்தபோது  எங்கள் உறவினர் ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று இந்த உணவை ஆர்டர் செய்தார்கள். அப்போதிலிருந்தே எனக்கு பெயர் சந்தேகம் இது வரை தீர்ந்தபாடில்லை. A ROSE IS A ROSE BY WHATEVER NAME YOU CALL IT. அன்றையிலிருந்து எனக்கு மிகவும் விருப்பமான உணவு இது. செயல் முறை விளக்கம் தருகிறேன். செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்.

முதலில் சோலே அல்லது சென்னா செய்யும் முறை

தேவையான பொருட்கள். 1.) வெள்ளை கடலை, ( காபுல் சென்னா என்றும் கூறுவார்கள். ) சுமார் ஒரு கப். முதல் நாள் இரவிலேயே ஊறவைத்துக் கொள்ளவும்.2) வெங்காயம் மூன்றோ நான்கோ( பெரியது) 3). தக்காளி சுமாரான சைசில் நான்கு.4) இஞ்சி கொஞ்சம்5) கொத்தமல்லித் தூள் . 6) மிளகாய் தூள்
7) தாளிக்க சீரகம் , கடுகு. 8.) எண்ணை  தேவையான அளவு. 9) பச்சைக் கொத்தமல்லி 10) புளி கொஞ்சம் 11) உப்பு தேவையான அளவு. 

ஊறவைத்த கடலையை நன்றாகக் கழுவிக் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும் இஞ்சி,வெங்காயம் தக்காளியை நறுக்கி தனித்தனியே மிக்சியில்  அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணைவிட்டுகடுகு சீரகம் தாளிக்கவும். அதில்  அரைத்துவைத்த விழுதை வதக்கவும் அதில் கொத்தமல்லித் தூள் மிளகாய்த்தூள்  சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையில் வேகவைத்த வைத்த கடலையில் சிறிது எடுத்துவைத்து மீதியைப் போடவும்தேவையான அளவு உப்பு சேர்த்து  சிறிது நீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். சிறிது எடுத்து வைத்திருந்த கடலையை மிக்சியில் ஒரு சுற்று ஓடவிட்டு அதை வாணலியில் இருக்கும் கலவையில் ஊற்றவும். இதில் சிறிது புளி கரைத்த நீரை  நன்றாகக் கலந்து கொதித்தபிறகு இறக்கி வைத்து அதில்வறுத்துப் பொடி செய்து வைத்த சீரகமும்  பொடியாக நறிக்கிய பச்சைக் கொத்துமல்லியைம் சேர்க்கவும் சுவையான சோலே தயார் ( புளி கரைத்த நீர் சிறிது புளிப்பு சுவை சேர்க்கவே. அதற்குப் பதிலாக ஆம்சூர் பொடி கலக்கலாம்.  இந்த செய்முறையில் அளவுகள் அவரவர் ருசிக்கேற்றபடி உபயோகிக்கலாம். சமையலில் அளவுகள் எல்லாம் கண்பார்த்து கை செய்ய வேண்டியது என்பார் என் மனைவ)

அடுத்து பட்டூரா செய்யும் முறை. 
கோதுமை மாவோ மைதா மாவோ கொண்டு பூரி செய்வது போல் தான். இதில் ஒரே வித்தியாசம் என்னவென்றால் உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை நீக்கி மசித்துக்கொள்ள வேண்டும். பூரிக்கு மாவு பிசையும்போது நீரே கலக்காமல் மசித்த உருளைக் கிழங்கில் மாவைச் சேர்த்துப் பிசைய வேண்டும் சிறிதே அளவு பொடி உப்பு சேர்த்து. பூரி இடும் பதம் வரும்வரை மாவைக் குழைக்க வேண்டும்ன்ண் ண்டும். பிறகு சப்பாத்திக்கல்லில் பூரிக்கு உருட்ட வேண்டும். மிகவும் மெலிதாகவும் இருக்கக் கூடாது. தடிமனாகவும் இருக்கக் கூடாது. பிறகென்ன ? வாணலியில் தேவையான அளவு எண்ணை ஊற்றி  நன்றாகக் காய்ந்தபிறகு பூரி வார்த்தெடுக்க வேண்டும்.
நண்பர்களே நண்பிகளே யம்மி யம்மி சோலே பட்டூரா ரெடி. 
செய்து பார்த்து ருசியுங்கள்.