Monday, 23 December 2013

பொடித்துவலா பொடுத்துவலா.?


                            பொடித்துவலா பொடுத்துவலா.?
                            -----------------------------------------------



பூவையின் எண்ணக்களில் இதுவரை எட்டே பதிவுகள்தான் எழுதி இருக்கிறேன். பலருக்கும் இம்மாதிரி ஒரு வலைத்தளம் இருப்பதும் அது gmb writes எழுதும் என்னால்தான் எழுதப் படுகிறதென்பதும் தெரியாது, அதனால்தானோ என்னவோ இரண்டு மூன்று முறை வலைச் சரத்தில் அறிமுகப் பட்டிருக்கிறது. வெறுமே ஒரு வலைத் தளத்தை உருவாக்கி அதில் பதிவுகள் எழுத வில்லை என்றால்...... என்ன குடியா மூழ்கிவிடும். ? இருந்தாலும் அவ்வப் போது வலைப் பூவை ரட்சித்தல் அவசியம் என்று தோன்றியதால் மீண்டும் சில சமையல் குறிப்புகளுடன் ஆஜர். புகழ் மிக்க சமையல் பதிவாயினிகள் ( பதிவர்களுக்கு எதிர்மறை.?) இருக்கும்போது என் பதிவுகள் சற்றே வித்தியாசமாக இருக்க வேண்டும் அல்லவா.? எந்த காய்கறிகளை சமையலுக்கு உபயோகித்தாலும் அவற்றின் தனிச் சுவை தெரிய வேண்டும் என்று நம்புகிறவன் நான். ஏகப் பட்ட மசாலாக்களைப் போட்டு காய்கறிகளின் சுவை மழுங்கக் கூடாது. சரி. இன்றைக்கு மிகவும் எளிதாக எவரும் செய்யக் கூடிய பொரியல் ( எங்கள் வீட்டில் பொடுத்துவல் அல்லது பொடித்துவல் என்பார்கள். எளிதாகச் செய்ய கொத்தவரங்காய், பீன்ஸ் அல்லது புடலங்காய் உபயோகிக்கலாம்.
கொத்தவரை . அல்லது பீன்ஸ் காம்பு எடுத்து நாறெடுத்து சுத்தமாகக் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள்வும் 5 mm க்கு மேல் இருக்க வேண்டாம். புடலங்காய் இளசாக இருக்க வேண்டும் தோலைச் சீவி சுத்தம் செய்து, உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் புடலை 10 mm சைசில் இருக்கலாம்.

 தேவையான பொருட்கள். தாளிக்க சற்றே தாராளமாக எண்ணை, கடுகு, பச்சை மிளகாய் ( சற்றே பெரிதாக நறுக்க வேண்டும். பச்சை நிறக் காயுடன் சேர்ந்த சமைப்பதால் வித்தியாசம் தெரிய வேண்டும் ) சிறிது உளுத்தம் பருப்பு, சிறிது கடலைப் பருப்பு. துருவிய தேங்காய்  உப்பு.

 செய்முறை
------------
வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளித்து உ. பருப்பு, க, பருப்பு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பருப்புகள் பொன் நிறத்தில் வறுபடவேண்டும். பிறகு நறுக்கிய காயை போடவும்.சிறிது மஞ்சத்தூள் போடவும் சிறிதே நீர் ஊற்றி வேக வைக்கவும். அவ்வப்போது கிளறிக் கொண்டு இருக்கவும்.வேகும் போது உப்பு சேர்க்கவும். காரமில்லாததால் உப்பின் அளவு குறைவாகவே இருக்க வேண்டும். வெந்து நீர் வற்றியதும் துருவிய தேங்காய் சேர்க்கவும்.

 இப்போதெல்லாம் பொடுத்துவலில் பாதாம் பருப்பு நறுக்கிப் போடுகிறோம். சுவை சேரும். (கவனிக்க வேண்டியது குறிப்பிட்ட காய்களை ஒன்றாகச் சேர்த்து சமைக்க வேண்டாம்)

என்ன நண்பர்களே ( நண்பிகளே ) சமைத்துப் பார்த்துக் கருத்துச் சொல்லவும் அடுத்த பதிவு கேக் செய்முறை ( எளிய வசதிகளுடன் )   

3 comments:

  1. கத்தரிக்காய் பொடி தூவிக் கறி மாதிரி ஏதோ சொல்லப் போகிறீர்கள் என்று நினைத்தேன்!

    ReplyDelete
  2. புடலங்காயை நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துச் சிறிது நேரம் வைத்துவிட்டுப் பின்னர் கடுகு, உபருப்பு, மி.வத்தல் தாளித்து இதே போன்ற கறி எங்க வீட்டில் செய்வோம். இதோடேயே கொஞ்சம் பாசிப்பருப்பையும் சேர்த்து ஊற வைத்துப் புடலங்காயோடு போட்டுச் செய்யும்போது தேங்காய் சேர்ப்பது உண்டு.

    இரு முறைகளிலும் தாளித்தபின்னர் புடலங்காயைச் சேர்க்கும்போது அதில் இருக்கும் நீரை எடுத்துவிட வேண்டும். பின்னர் வதக்கும்போது மூடி வைத்து வதக்க வேண்டும். நன்கு வெந்து சுருண்டுவிடும்.

    பீன்ஸ், கொத்தவரை என்றால் நறுக்கிக் கொண்டு கொஞ்சம் போல் நல்லெண்ணெய் விட்டு வதக்கி மஞ்சள் பொடி சேர்த்து, உப்புப் போட்டுக் கொஞ்சம் வேக வைத்துக் கொள்வோம். பின்னர் வெந்த நீரை வடிகட்டிப் பின்னர் தாளிதம்+தேங்காய்த் துருவல் சேர்ப்பது உண்டு. பச்சைக்காய்களுக்கு எல்லாம் மி.வத்தல் தான் போடுவோம். தெரியும் என்பதற்காக. பச்சை மிளகாய் போட்டால் என்னதான் பெரிதாக நறுக்கினாலும் வதங்குகையில் சுருங்கிவிடும், வாயில் அகப்பட்டுச் சிலர் கடிப்பார்கள் என்பதால் போடுவதில்லை. ஒவ்வொருத்தர் சமையல் முறையும் ஒவ்வொரு முறையில் இருக்கும். நீங்க சொல்லி இருக்கும் முறையிலும் செய்து பார்க்கலாம்.

    ஆனால் புடலையே நீர் விட்டுக்கும் என்பதால் நீர் தெளிக்க வேண்டாம் என எண்ணுகிறேன். :))))))

    ReplyDelete
  3. பொரியலுக்கு "பொடித்துவல்" என்று ஒரு பெயரும் இருப்பது அறிந்து மகிழ்ச்சி !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete