Sunday 16 June 2013

முளைப் பயறு கூட்டு...



                                                    முளைப் பயறு  கூட்டு...
                                                     -----------------------------



இன்றைக்கு எளிமையான , ருசியான, உடலுக்கு ஏற்றதான ஒரு ரெசிபி.   பாசிப்பயறில் தண்ணீர் ஊற்றிவைத்து மறுநாள் நீரைவடித்து வைத்தால் மறுநாள் பயறு முளை விட்டிருக்கும். முளைவிட்ட பயறை வேகவைக்கவும். வெங்காயத்தை  எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அந்த அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும் கடாயில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு, சிறிது சீரகம் போட்டுத் தாளிக்கவும் அதில் நறுக்கிய வெங்காயத்தையும் நறுக்கிய தக்காளியும்  போட்டு வதக்கவும். அதில் வெந்த பயறைப் போட்டு சிறிது நீர் ஊற்றி கொஞ்சம் மஞ்சத்தூள் தேவையான உப்பு சிறிது மிளகாய்த் தூள் போட்டுக் கொதிக்க விடவு.ம்.நன்றாகக் கொதி வந்ததும் இறக்கி வைத்து உபயோகிக்கவும்.
( விருப்பமுள்ளவர்கள் தாளிதத்தில் சிறிது சோம்பு சேர்க்கலாம் ) 

இதில் நான் அளவுகள் கூறவில்லை.எத்தனை பேருக்கு என்று பார்த்து அளவுகள் எடுத்துக் கொள்ளலாம். நீர் நிறைய விட்டு குழம்பாகவோ, நீரைக் குறைத்து சிறிது கெட்டியாகவும் வைக்கலாம். சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாய் இருக்கும். செய்து பார்த்துக் கருத்து சொல்லலாமே.  





Friday 7 June 2013

பாகற்காய் பொரிச்ச குழம்பு....!


                                  பாகற்காய் பொரிச்ச குழம்பு....!
                                 -------------------------------------------




 நான் மொளகூட்டல் இஞ்சிப்புளி செய்முறையை கடந்த பதிவில் எழுதி இருந்தேன். திரு. அப்பாதுரை செய்து பார்த்து நன்றாக இருந்தது என்று கூறிவிட்டு பொறிச்ச குழம்பு போலிருந்தது என்றார். என் மனைவி அவள் சமைக்கும் பொறிச்ச குழம்பின் செய்முறையைக் கூறினாள் This PORICHA KUZHAMPU is entirely different. !

பாகற்காயை அதன் கசப்பு தெரியாதபடி ருசியாக சமைக்க இந்த முறை.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு- சுமார் இரண்டு கைப்பிடி அளவு.
புளிக் கரைசல் ஒன்றரைக் கப்(அதிக நீராகவோ , அல்லது கெட்டியாகவோ கூடாது. )
பொடியாய் நறுக்கிய பாகற்காய் ஒரு கப்.
தனியா,மூன்றிலிருந்து நான்கு டீஸ்பூன்
 உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, ஒவ்வொன்றிலும் ஒரு டீஸ்பூன்
வெந்தயம் கால் டீஸ்பூன், சிறிது பெருங்காயம் ஐந்தாறு காய்ந்த மிளகாய்
தேங்காய் சிறிது
உப்பு தேவையான அளவு.
தாளிக்கக் கடுகு கறிவேப்பிலை, துருவிய தேங்காய் ஒரு ஸ்பூன், எண்ணை
சிறிது வெல்லம் ( விரும்பினால் )


செய் முறை.
தனியா உ. பருப்பு, க. பருப்பு,வெந்தயம் காய்ந்தமிளகாய், பெருங்காயம் இவற்றை எண்ணையில் வறுத்து எடுத்து தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்

துவரம் பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
புளிக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் ஏற்றிக் கொதிக்க விடவும் நறுக்கிய பாகற்காயை அதில் போட்டு வேக விடவும். சிறிது மஞ்சத்தூள் உப்பு சேர்க்கவும் புளியின் பச்சை வாசனை போனபிறகு , பாகற்காய் வெந்தபிறகு வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்க்கவும்சிறிது விட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்க்கவும் எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து எண்ணையில் கடுகு தாளிக்கும்போது துருவிய தேங்காயையும் சேர்த்து நன்றாக வதக்கித் தாளிக்கவும். ( அவரவர் ருசிக்கு ஏற்றபடி தேவைப் பட்டால் பொறிச்ச குழம்பை இறக்கும் முன் சிறிது வெல்லம் சேர்க்கலாம்)
சாதாரணமாக துவரம் பருப்பு போட்டுச் செய்யும் தக்காளி ரசத்தை , ஒரு மாற்றத்துக்கு பாசிப் பருப்பு போட்டு செய்து பாருங்களேன். சூப்பராக இருக்கும்.  

Sunday 2 June 2013

மொளகூட்டல் இஞ்சிப் புளி.

                           
                                            மொளகூட்டல்  இஞ்சிப் புளி
                                           -----------------------------------------


பூவையின் எண்ணங்களில் இன்று மொளகூட்டல் ( அல்லது மிளகூட்டலா.?) செய்யும் முறையைக் கவனிப்போம். சாதத்துடன் பிசைந்து உண்ண செய்யும் குழம்பு இது. பொதுவாக பாலக்காட்டுப்பக்கம் செய்கிறார்கள். புளி காரம் இல்லாத குழம்பு. தொட்டுக்கொள்ள காரசாரமாக  இஞ்சிப் புளி என்று செய்து வைப்பார்கள். கேரள விருந்துகளில் இஞ்சிப் புளி ஃபேமஸ் சில குறிப்பிட்ட காய்கறிகளில் மொளகூட்டல் கூடுதல் சுவை கொடுக்கும். உதாரணத்துக்கு  உருளைக் கிழங்கு, காபேஜ். பீன்ஸ் காரட் போன்றவைகளை உபயோகிக்கலாம். 



இனி செய்முறை பார்ப்போம். அளவுகள் அவரவர் வைக்கும் குவாண்டிடியைப் பொறுத்தது. நான் கூறும் அளவு நாலவர் அடங்கிய ஒரு குடும்பத்துக்கு ஒரு வேளைக்கு வரும்.
தேவையான பொருட்கள்.
துவரம் பருப்பு மூன்று கைப்பிடி அளவு
உருளைக் கிழங்கு சுமாரான சைசில் மூன்று
கேபேஜ் நூறிலிருந்து நூற்றைம்பது கிராம்
தேங்காய் கால் மூடி
காய்ந்த மிளகாய் ஐந்து
சீரகம் முக்கால் டீஸ்பூன்
தாளிக்க எண்ணை கடுகு கறிவேப்பிலை.
உப்பு தேவையான அளவு.


செய்முறை

துவரம் பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும் குக்கரில் துவரம் பருப்பை வேக வைக்கும் போதே தோல் நீக்கி நறுக்கிய உருளைக் கிழங்கையும் பொடியாக நறுக்கிய காபேஜையும் சேர்த்து வேக வைக்கலாம்.
தேங்காய் மிளகாய் சீரகம் இவற்றை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் . .
வெந்தபருப்பை சிறிது நீர் கலந்து கொதிக்க வைக்கவும் வந்த கொதியில் வெந்து நறுக்கிய காய்களைப் போடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஓரிரண்டு கொதிக்குப் பிறகு அரைத்து வைத்த தேங்காய்க் கலவையைச் சேர்க்கவும் நன்கு கொதித்தபிறகு இறக்கி வைத்து தாளிக்கவும்(புளி காரம் இல்லாததால் உப்பு போடும் அளவில் கவனம் தேவை.) சாதத்துடன் பிசைந்து சாப்பிட மொளகூட்டல் ரெடி.! 


இதன் கூட தொட்டுக்கொள்ள இஞ்சிப் புளி செய்ய தேவையான பொருட்கள்.

திக்கான புளிக் கரைசல் ஒரு கப்
பச்சை மிளகாய் 8 லிருந்து 10
இஞ்சி 25 கிராம்
நல்லெண்ணை தேவையான அளவு.
மஞ்சத்தூள் கால் ஸ்பூன்.
மிளகாய்த்தூள் கால் ஸ்பூன்
தனியாத்தூள் அரைஸ்பூன்.
கடுகு கறிவேப்பிலை.
வறுத்துப் பொடித்த எள் மூன்று ஸ்பூன்
சிறிது வெல்லம்.


செய்முறை
இஞ்சி பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.. கடாயில் தாராளமாக நல்லெண்ணை ஊற்றி கடுகு போட்டுப் பொரிந்தவுடன் இஞ்சி பச்சைமிளகாய் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். அதில் புளிக்கரைசலை ஊற்றவும் நன்றாகக் கொதிக்க வேண்டும். அதில் மஞ்சத்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள்  இடவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கொதிக்கும்போதே சிறிது வெல்லம் சேர்க்கவும். நன்றாகக் கொதித்து திக்கான பதம் வரும்போது இறக்கி வைக்கும்முன் பொடித்த எள்ளையும் சேர்க்கவும். இஞ்சி புளி தயார்.

மொளகூட்டல் இஞ்சிப் புளி காம்பினேஷன் சுவையாய் இருக்கும்.

செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லலாமே.