Sunday, 2 June 2013

மொளகூட்டல் இஞ்சிப் புளி.

                           
                                            மொளகூட்டல்  இஞ்சிப் புளி
                                           -----------------------------------------


பூவையின் எண்ணங்களில் இன்று மொளகூட்டல் ( அல்லது மிளகூட்டலா.?) செய்யும் முறையைக் கவனிப்போம். சாதத்துடன் பிசைந்து உண்ண செய்யும் குழம்பு இது. பொதுவாக பாலக்காட்டுப்பக்கம் செய்கிறார்கள். புளி காரம் இல்லாத குழம்பு. தொட்டுக்கொள்ள காரசாரமாக  இஞ்சிப் புளி என்று செய்து வைப்பார்கள். கேரள விருந்துகளில் இஞ்சிப் புளி ஃபேமஸ் சில குறிப்பிட்ட காய்கறிகளில் மொளகூட்டல் கூடுதல் சுவை கொடுக்கும். உதாரணத்துக்கு  உருளைக் கிழங்கு, காபேஜ். பீன்ஸ் காரட் போன்றவைகளை உபயோகிக்கலாம். 



இனி செய்முறை பார்ப்போம். அளவுகள் அவரவர் வைக்கும் குவாண்டிடியைப் பொறுத்தது. நான் கூறும் அளவு நாலவர் அடங்கிய ஒரு குடும்பத்துக்கு ஒரு வேளைக்கு வரும்.
தேவையான பொருட்கள்.
துவரம் பருப்பு மூன்று கைப்பிடி அளவு
உருளைக் கிழங்கு சுமாரான சைசில் மூன்று
கேபேஜ் நூறிலிருந்து நூற்றைம்பது கிராம்
தேங்காய் கால் மூடி
காய்ந்த மிளகாய் ஐந்து
சீரகம் முக்கால் டீஸ்பூன்
தாளிக்க எண்ணை கடுகு கறிவேப்பிலை.
உப்பு தேவையான அளவு.


செய்முறை

துவரம் பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும் குக்கரில் துவரம் பருப்பை வேக வைக்கும் போதே தோல் நீக்கி நறுக்கிய உருளைக் கிழங்கையும் பொடியாக நறுக்கிய காபேஜையும் சேர்த்து வேக வைக்கலாம்.
தேங்காய் மிளகாய் சீரகம் இவற்றை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் . .
வெந்தபருப்பை சிறிது நீர் கலந்து கொதிக்க வைக்கவும் வந்த கொதியில் வெந்து நறுக்கிய காய்களைப் போடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஓரிரண்டு கொதிக்குப் பிறகு அரைத்து வைத்த தேங்காய்க் கலவையைச் சேர்க்கவும் நன்கு கொதித்தபிறகு இறக்கி வைத்து தாளிக்கவும்(புளி காரம் இல்லாததால் உப்பு போடும் அளவில் கவனம் தேவை.) சாதத்துடன் பிசைந்து சாப்பிட மொளகூட்டல் ரெடி.! 


இதன் கூட தொட்டுக்கொள்ள இஞ்சிப் புளி செய்ய தேவையான பொருட்கள்.

திக்கான புளிக் கரைசல் ஒரு கப்
பச்சை மிளகாய் 8 லிருந்து 10
இஞ்சி 25 கிராம்
நல்லெண்ணை தேவையான அளவு.
மஞ்சத்தூள் கால் ஸ்பூன்.
மிளகாய்த்தூள் கால் ஸ்பூன்
தனியாத்தூள் அரைஸ்பூன்.
கடுகு கறிவேப்பிலை.
வறுத்துப் பொடித்த எள் மூன்று ஸ்பூன்
சிறிது வெல்லம்.


செய்முறை
இஞ்சி பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.. கடாயில் தாராளமாக நல்லெண்ணை ஊற்றி கடுகு போட்டுப் பொரிந்தவுடன் இஞ்சி பச்சைமிளகாய் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். அதில் புளிக்கரைசலை ஊற்றவும் நன்றாகக் கொதிக்க வேண்டும். அதில் மஞ்சத்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள்  இடவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கொதிக்கும்போதே சிறிது வெல்லம் சேர்க்கவும். நன்றாகக் கொதித்து திக்கான பதம் வரும்போது இறக்கி வைக்கும்முன் பொடித்த எள்ளையும் சேர்க்கவும். இஞ்சி புளி தயார்.

மொளகூட்டல் இஞ்சிப் புளி காம்பினேஷன் சுவையாய் இருக்கும்.

செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லலாமே.    
 

 
 
 

15 comments:

  1. வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... எப்படி இருக்கிறது என்று இனி மேல் தான்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  2. மிளகூட்டல் கீரையில் தான் செய்வோம். அல்லது பூஷணி, சேனைக்கிழங்குகளில். இஞ்சிப் புளிக்கு மிளகாய்த் தூள் , தனியாத் தூள் போட்டதில்லை. வெல்லம், பொடித்த எள்ளும் போடுவதில்லை. இஞ்சி, பச்சைமிளகாய், புளி கரைத்த நீர், உப்பு, கடுகு, வெந்தயம், தாளிக்க, வதக்கப் போதுமான நல்லெண்ணெய். இவ்வளவு தான். :))))

    ReplyDelete
  3. வீட்டுக்கு வீடு செய்முறையும், சுவையும் மாறும். :)))

    ReplyDelete
  4. நன்றி ஐயா. செய்து பார்த்து விடுகிறேன் :)

    ReplyDelete
  5. செய்து பார்க்கிறேன். எளிமையாகத் தோணுது.
    பொரிச்ச குழம்பு/கூட்டு என்பார்களே அது போல் இருக்குது முதல் ரெசிபி.
    இஞ்சிப்புளி சமீபப் பயணத்தில் ஒரு கேரள ரெஸ்டாரென்டில் சுவை பார்த்தேன் - ஆஹா ஓஹோ என்றார்கள்.. அதனால் தானோ என்னவோ அது அவ்வளவாகச் சுவைக்கவில்லை :)
    ஒரு வீக் என்ட் சமையலுக்கு ஆச்சு, நன்றி.

    ReplyDelete
  6. இங்கே வெள்ளை எள் தான் சுலபமா கிடைக்குது - கறுப்பு எள் தேட இந்தியக் கடைக்குப் போகணும். சோம்பல் :)

    வெள்ளை எள் பரவாயில்லையா?

    ReplyDelete
    Replies
    1. கறுப்பு எள் எல்லா இந்திய அங்காடிகளில் கிடைக்குமே அப்பாதுரை. ஆனால் கிலோ கணக்கில் வாங்கி வைச்சுக்கணும். :)

      Delete
    2. ஓஹோ, நீங்களும் இந்தியக் கடைனு தான் எழுதி இருக்கீங்களோ? அவசரத்தில் இந்தியாவுக்குனு படிச்சுட்டேன். :) அ.வ.சி.

      Delete
  7. மிளகூட்டல் செய்தேன் டின்னருக்கு.. பொறிச்ச குழம்பு டேஸ்ட் வருது, சரியாகச் செய்தேனா தெரியவில்லை. ஆனால் செம டேஸ்ட். நன்றி.
    இஞ்சிப்புளி இன்னொரு வாரம்.

    உருளைக்குப் பதில் கீரையைப் போட்டா கீரை மிளகூட்டலா? அம்புட்டுதேனா?

    ReplyDelete
  8. மறுபடியும் இன்னிக்கு மிளகூட்டல். இஷ்டத்துக்கு காய்கறிகளைச் சேர்த்தேன். அட்டகாசமாக வந்தது. ரொம்ப ஹெல்தி ரெசிபி. நன்றி சார்.

    ReplyDelete
  9. மிளகட்டல் மிக அருமை.

    ReplyDelete
  10. வணக்கம் சார், உங்கள் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில். ரூபன் அவர்கள் எனக்கு முந்தி வந்து சொல்லி விட்டார். நன்றி ரூபன்.

    ReplyDelete
  11. சுவையான சமையல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    வலைச்சர அறிமுகத்துக்கு
    வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!!

    ReplyDelete
  12. மிக அருமையாக இருக்கிறதே ஐயா!..

    நீங்கள் இங்கும் உங்கள் கைவண்னம் காட்டுகிறீர்கள் என்று இன்றுதான் சகோதரி கோமதி அரசின் வலைச்சர அறிமுகத்தில் தெரிந்துகொண்டேன்!..

    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  13. இதுதானா இஞ்சிப்புளி. மிளகூட்டல் செய்முறை பார்த்தேன். அடுத்தமுறை முயற்சிக்கிறேன் ஜி.எம்.பி. சார்.

    ReplyDelete