Saturday, 7 September 2013

புட்டும் கடலையும்


                                          புட்டும்  கடலையும்
                                           --------------------------பூவையின் எண்ணங்களில் சமையல் குறிப்புகள் எழுதி நாட்கள் பல ஆகின்றன. நான் சற்றும் எதிர்பாராவகையில் பூவையின் எண்ணங்கள் பதிவு மூன்று முறையோ அதிகமாகவோ வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.வாசகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. நான் எழுதும் சமையல் குறிப்புகளைப் படிப்பதோடு நிற்காமல் செய்தும் பார்த்துக் கருத்திடக் கோருகிறேன். இந்த முறை கேரளத்தில் பிரசித்தி பெற்ற புட்டு பற்றியும் அதற்குக் கூட்டாக கடலையும் செய்வது பற்றி எழுதுகிறேன். புட்டு என்றவுடன் “புட்டுக்கு மண் சுமந்த ஈசனின்திருவிளையாடல் நினைவுக்கு வரலாம். இந்தப் புட்டு அந்தக் காலப் புட்டுதானா தெரியாது. எந்தக் காலப் புட்டானால் என்ன.? இது கேரள பாரம்பரிய ஒரு உணவு வகை.இதன் செய்முறையைக் கூறுகிறேன்

 செய்வதற்குத் தேவையான புட்டு மாவு தயாரிக்கும் முறை.

நல்ல பச்சரிசியை நன்றாகக் கழுவிநீரை வடிகட்டிக் காய வைக்கவும் காயவைக்கும்போது அது வெடவெடவென்று உலறும் முன் சற்றே ஈரப்பதம் இருக்கும்போதே அரைத்து சலித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை லேசாக வறுத்து வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம் கேரளாவில் சிவப்பு புழுங்கல் அரிசி உபயோகிக்கிறார்கள்.கடைகளில் புட்டுப் பொடி என்றே விற்கிறார்கள்.


புட்டுக் குழல்
இந்தப் புட்டுப் பொடியில் சிறிதே தேவைக்கேற்ற உப்பு கரைத்த நீர் ஊற்றி கலக்க வேண்டும். நீரின் அளவு புட்டு மாவைக் கையில் பிடித்தால் பிடிப்பு கிடைக்க வேண்டும். அதேசமயம் பிடியைத் தளர்த்தினதும் கெட்டிப் படாமல் இருக்க வேண்டும். இந்த செய்முறை சரியாக வராவிட்டால் புட்டு வேக வைத்தபின் ஆங்காங்கே கெட்டியாக இருக்கும் வாய்ப்புண்டு.இதை ஆவியில் வேகவைக்கப் புட்டுக் குழல்கள் கிடைகின்றன. புட்டுக்குழலில் சிறிது மாவை(ஒன்று முதல் ஒன்றரை அங்குல கனம் வரும்வரைத் திணிக்கவும். அதன் மேல் துருவிய தேங்காய் போடவும். மேலும் அதன் மேல் முதலில் சொன்னபடி மாவைத் திணிக்கவும். பின் தேங்காய்த் துசுவலைச் சேர்க்கவும். இப்படியே புட்டுக் குழாய் கழுத்துவதுவரை நிரப்பவும் பிறகு குழலின் மூடியால் மூடவும். . புட்டுக் குழலின் கீழ்ப் பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி அதன் மேல் குழலை வைத்து ஆவியில் வேக வைக்கவும் வெந்து எடுக்கும்போது புட்டு உருளைகள் அழகாக வெளிவரும்.

அவித்த புட்டு உருளைகள்.       

புட்டுக் குழல் கிடைக்கவில்லை என்றால் இட்லிப் பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல் இட்லிக் குழியில் மாவையும் தேங்காய்த் துருவலையும் கலந்து  ஆவியில் வேக வைக்கலாம். எப்படிச் செய்தாலும் அது வயிற்றுக்குள் போகும் போது ஷேப்பே மாறிவிடும். இந்த ஆவியில் வெந்த புட்டினை உண்ணும் விதம் அவரவர் விருப்பம் போல் இருக்கும். சாதாரணமாக  இந்தப் புட்டை நெய் சர்க்கரை வாழைப்பழம் இவற்றுடன் பிசைந்து சாப்பிடுதல் ஒரு முறை.
இன்னொரு முறையில் கொண்டைக் கடலை வேக வைத்துக் குழம்பு செய்து அதனுடன் உண்ணலாம்.

கொண்டைக் கடலையை முன்னிரவே நீரில் ஊறவைத்து அதை குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணை ஊற்றி தாளிதம் செய்யும்போது பொடியாய் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து உப்பு மஞ்சப் பொடி மிளகாய்ப் பொடி மல்லிப்பொடி இவற்றுடன் சிறிது நசுக்கிய இஞ்சி கறுவேப்பிலை சேர்த்து வதக்கவும் அதன் பின் சிறிது நீரூற்றி வேகவைத்தக் கடலையையும் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும். இதைப் புட்டுடன் கலந்து சாப்பிடலாம்
சிலர் கடலைக்குப் பதில் பாசிப்பயரை உபயோகிக்கிறார்கள்
.
புட்டுக் கடலையோ, புட்டுப் பழமோ காலை உணவாகும் போது உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் மதியம் வரை பசியை விரட்டிவிடும்.

என்ன நண்பர்களே செய்து பார்த்துக் கருத்து தெரிவிக்கலாமே.         


 


   
 

 8 comments:

 1. கேரளப்பாரம்பரிய உணவான குழாய்ப்பிட்டும், கடலக்கறி செய்முறைக்கும் நன்றி. இந்தக் குழாய்ப்பிட்டு செய்து பார்த்ததில்லை. கடலக்கறி சப்பாத்திக்குச் செய்வது உண்டு. இம்முறையிலும், வேறு முறைகளிலும். :)

  ReplyDelete
 2. என்னவோ இன்னிக்கு எந்தப் பதிவிலும் பின்னூட்டம் கொடுக்க முடியலை. :( எரர் வருது. ஆனால் இங்கே போயிருக்கு. :)))

  ReplyDelete
 3. நவராத்திரி டயத்தில் வீட்டில் எப்போதாவது புட்டு செய்வார்கள்.. புட்டுக்கும் எனக்கும் பிணக்கு. அரைகுறையாக வெந்த வெல்லச் சீடைகள் போலிருக்கும், சகிக்காது :) 'கொலுவுக்கு வந்தவங்களுக்கு குடுமா'என்று ஓடிவிடுவேன். கேரள புட்டு பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது.

  space contraption மாதிரி இருக்கே புட்டுக்குழாய்? புட்டு ரோல் படம் ரொம்ப அழகு. செய்முறை சிரமமா இருக்கும் போலிருக்குதே?
  புட்டுக் கடலை ட்ரை செய்தே ஆக வேண்டும். வாழைப்பழத்தில் பிசைந்து சாப்பிட்டால் புட்டுப் பழமா?

  ReplyDelete
 4. அம்மா பிறந்த ஊர் திருவனந்தபுரம் அதனால் இந்த முறையில் தான் புட்டு செய்வார்கள்.
  ஆவணி மூலத்து அன்று மதுரையில் எல்லோர் வீட்டிலும் புட்டு இருக்கும்.
  மதுரையில் புட்டுத்தோப்பு என்றே ஒரு இடம் இருக்கிறது. ஆவணி மூலத்தன்று புட்டு திருவிழா நடக்கும்.ஈசன் புட்டுக்கு மண் சுமந்த நிணைவாய்.
  நவராத்திரியில் வெள்ளிக் கிழமை புட்டு செய்வார்கள்.
  உங்கள் கடலைக்கறி செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete

 5. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
  ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
  இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
  அன்பாம் அமுதை அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 6. கேரளாவில் கோட்டயத்திலும் ,கண்ணூரிலும் ஏழு ஆண்டுகள் நான் மட்டும் இருந்தபோது புட்டும் கடலையும், சில சமயம் அவித்த நேந்தரன் பழங்களையும் சாப்பிட்டுருக்கிறேன். அப்போது நினைத்துண்டு எப்படி இப்படி புட்டு உருளையாய் அழகாய் இருக்கிறதென்று. இன்று தங்கள் பதிவின் மூலம் அந்த ரகசியத்தை தெரிந்துகொண்டேன். என்னால் செய்து பார்க்க இயலாது. வீட்டம்மையை செய்ய சொல்லி, ருசித்து புசிக்க வேண்டியதுதான்.

  ReplyDelete
 7. இப்படி அசத்தலாய் குறிப்பு சொன்னால் மூன்று முறை என்ன ?இன்னும் பல முறை வலைச்சரத்தில் போடலாமே?

  ReplyDelete
 8. படத்தை பார்க்கும்போது சாப்பிடணும்போல தோணுதே..!

  நல்லதொரு குறிப்புகள் ஐயா..


  பகிர்வினிற்கு மிக்க நன்றி..

  ++++++++++++

  வணக்கம்...

  நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

  அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

  சரியா...?

  உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

  அப்போ தொடர்ந்து படிங்க...

  ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

  ReplyDelete